17 ஜூலை, 2010

தேர்தல் முறையில் விரைவில் மாற்றம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சஜ.வி.பியுடன் அரசியலமைப்புத் திருத்தம் பற்றிப் பேச்சு


அரசியலமைப்பு திருத்தத்தை இந்த வருடத்தினுள் துரிதமாக மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறையில் கீழே நடத்தப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட தலைவர்கள் நேற்று தெரிவித்தனர்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஐ.தே.க.வுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்வரும் நாட்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. போன்ற கட்சிகளுடன் பேச உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (16) கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

அமைச்சர்களான மைத்திரிபால சிரிசேன, நிமல் சிரிபால டி சில்வா மற்றும் டளஸ் அலஹப்பெரும ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறையை மாற்றவே முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் மறுசீரமைப்பு குழு தேர்தல் முறையை மாற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எதிர்க் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்று தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படும். தொகுதி முறையை அடிப்படையாகக் கொண்டதாக புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறை மாற்றப்படும். இதனூடாக கிராத்துக்கு ஒரு உறுப்பினர் தெரிவாவார்.

17 ஆவது திருத்தச் சட்டம் குறித்தும் ஐ.தே.க.வுடன் பேசுவோம். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படுமென அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கூறினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

பாராளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில் எமக்கு தேவையானவாறு யாப்பை மாற்ற முடியும். ஆனால் ஏனைய கட்சிகளுடன் பேசி யாப்பை திருத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். முழு அரசியல் கட்டமைப்பையும்

பாதிக்கக்கூடிய விடயமான யாப்புத் திருத்தத்தின் போது பரந்தளவில் செயற்பட அவர் முன்வந்துள்ளார். இதன்படியே எதிர்க் கட்சிகளின் கருத்தறியப்பட்டுள்ளது.

ஐ.தே.க.வுடனான பேச்சுக்களில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்றத்திற்குப் பொறுப்பு கூறக்கூடிய நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் முறையை ஏற்படுத்த பொது இணக்கம் காணப்பட்டுள்ளது. பிரதமரின் அதிகாரம் அதனுடன் தொடர்புடைய யாப்பு திருத்தங்கள் என்பன குறித்து எதிர்காலத்தில் ஆராயப்படும்.

காலம் கடத்தாது துரிதமாக அரசியல் யாப்பை திருத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். எதிர்க்கட்சிகளின் பூரண ஒத்துழைப்பு கிடைத்தால் மிக விரைவில் யாப்பை மாற்ற முடியும். இந்த வருட இறுதிவரை காத்திருக்காது துரிதமாக அரசியல் யாப்பை மாற்ற நடவடிக்கை எடுப்போம். எதிர்வரும் நாட்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் ஜனாதிபதி பேச்சு நடத்துவார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக ஒருவர் எத்தனை தடவையும் தெரிவாகலாம். அதற்கு கட்டுப்பாடு கிடையாது. முன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்களுக்கு பிரதமராக வர முடியும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் இதில் தடைகிடையாது.

பல வருடங்களின் பின்னர் யாப்பு திருத்தம் தொடர்பில் இரு பிரதான கட்சிகளுக்கிடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜீ.எஸ்.பி. பிளஸ், ஐ.நா. குழு ஆகியவற்றை சம்பந்தப்படுத்தி குழப்பிக்கொள்ளத் தேவையில்லை என்றார்.

அமைச்சர் டளஸ் அலஹப் பெரும கூறிதாவது,

ஐ.தே.க.வுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் ஏற்பட்டுள்ள பொது இணக்கப்பாடு சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாகும். ஜே.வி.பி. அடங்களான ஏனைய கட்சிகளுடனும் அரசாங்கம் பேச்சு நடத்தும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக