11 மார்ச், 2010

புலிகளை பலப்படுத்தும் 'சூப்பர் சக்திகள்' அபாயம்







கொழும்பு:""வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளைகளை பலப்படுத்தும் நோக்கத்துடன் சில "சூப்பர் சக்திகள்' இயங்கி வருகின்றன,'' என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறினார்.இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே பார்லிமென்டில் பேசியதாக, அந்நாட்டு அரசு பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள தகவல்:


இலங்கையை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் நோக்கத்திலும், அரசை சீர்குலைக்கும் நோக்கத்துடனும், வெளிநாடுகளில் சில "சூப்பர் சக்திகள்' செயல்பட்டு வருகின்றன. இந்த சக்திகள், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளைகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. உள்ளூரில் செயல்படும் சிலரின் உதவியுடன், இந்த சக்திகள் இயங்கி வருகின்றன.


புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ஒருவர், சமீபத்தில் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். மற்றொரு முக்கிய பிரமுகர், கொழும்பு புறநகர் பகுதியில் கைது செய்யப்பட்டார். இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம்.


இலங்கையில் ஏற்படுத்தப் பட்டுள்ள அவசர நிலை சட்டத்தால், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மக்களின் சுதந்திரத்துக்கு எந்த பிரச்னையும் இதனால் வராது. இதுகுறித்து ஒரு தரப்பினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.இவ்வாறு ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக