பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு போதும் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தியதில்லை. சிறை வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் புலி உறுப்பினர்களுக்காகவே அவசர காலச் சட்டம் தற்போது தேவைப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
உலக நாடுகளின் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய தேசியப் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைகளை ஏற்படுத்த எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை தற்போதைய அரசாங்கத்திற்கு பொதுமக்கள் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இதன் போதே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
"கடந்த ஜனாதிபதி தேர்தலில் 60 வீதமான வாக்குகளை வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொது மக்கள் பாரிய வெற்றியடைய செய்தனர். பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து அழித்தமைக்கும் கடந்த நான்காண்டு கால அபிவிருத்திப் பணிகளுக்கும் நன்றி செலுத்தும் முகமாகவே பொது மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்திருந்தனர்.
அதே போன்று எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பொது மக்கள் வெற்றியடைய செய்வது மட்டுமல்லாது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கி வலுவான பாராளுமன்றத்தை அமைக்க அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் அபிவிருத்திக்காக தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த முடியும்.
அத்தோடு 1978ஆம் ஆண்டிலிருந்து காணப்படும் இலங்கையின் அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். குறிப்பாக தேர்தல் முறை மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக முறை என்பன திருத்தங்களுக்கு கட்டாயமாக உட்படுத்தப்பட வேண்டும்.
17ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நிறைவேற்று சபை என்பவற்றை இயங்கச் செய்தல் போன்றவைகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
அரசாங்கம் மீது எதிர்க்கட்சி பொய் குற்றச்சாட்டுக்களை அரசியல் இலாபத்தை நோக்காக கொண்டு சுமத்தி வருகின்றது. அவசர காலச் சட்டம் அரசியல் தேவைக்காக அரசாங்கத்தினால் ஒரு போதும் பயன்படுத்தப்படவில்லை.
எதிர்காலத்திலும் அவ்வாறே. இலங்கையில் புலி பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று அவர்களது தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டுள்ளார்.
ஆனால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணை செய்யவும் தண்டனைகள் வழங்கவும் அவசரகாலச் சட்டம் அத்தியாவசியமானதொன்றாகும். எனவேதான் அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் இலாப நோக்கம் ஒன்றும் கிடையாது" எனக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக