புலிகள் அமைப்பைச் சேர்ந்த கைதிகள் எனப்படும் புனர்வாழ்வுப் பயனாளிகளுக்கான கிராமமொன்று அமைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் 10ஆயிரத்து 708 புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கைதிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களில் 737சிறுவர்களும் அடங்குவதாக அவர் கூறியுள்ளார். இவர்களுக்கான சமய ரீதியிலான புனர்வாழ்வுத் திட்டங்களும், உளநல மேம்பாட்டுத் திட்டங்களும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கைதிகளுக்காக மட்டக்களப்பில் உத்தேச புனர்வாழ்வுக் கிராமம் அமைக்கப்படவுள்ளது. சுமார் 3000 கைதிகளுக்கான வசதிகளைக் கொண்டதாக இந்தக் கிராமம் அமைக்கப்படவுள்ளது. விவசாயம் சார்ந்த திட்டங்களின் ஊடாக இந்தக் கிராமத்தில் தங்கவைக்கப்படும் கைதிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தக் கிராமத்தில் ஆன்மீகப் பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் என்பனவும் அமைக்கப்படவுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை செல்லவேண்டிய வயதில் உள்ளவர்கள் கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரியில் தமது கல்விச் செயற்பாடுகளில் மிகவும் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக