9 ஜூன், 2011

புலிகளின் சர்வதேச செயற்பாடு தளம் இலங்கையில் மீண்டும் மோதலை தூண்டுகிறது மக்களையும், நாட்டையும் பாதுகாக்கவே அவசர காலச்சட்டம்





பயங்கரவாத செயற்பாடுகள் இலங்கையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் சர்வதேசத் திலுள்ள தொடர்புகளின் ஊடாக அவர்களது செயற்பாடுகள் முடிவடையவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள புலிகளின் ஆதரவு அமைப்புகளும் மீண்டும் புலிகளை செயற்பட வைப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன என பிரதமர் டி. எம். ஜயரட்ண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்துப் பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று புதன்கிழமை பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் கூடியது. வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் பிரதமர் தி. மு. ஜயரட்ண அவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து பேசினார்.

பிரதமர் தொடர்ந்து பேசும் போது 2600 ஆம் ஆண்டு சம்புத்த ஜயந்தி மற்றும் படையினரின் வெற்றி விழா என்பன கொண்டாடப்பட்டதை நினைவு கூர்ந்து பேசினார். தொடர்ந்தும் பிரதமர் பேசும் போது:-

வடக்கு கிழக்கு இன்று துரித அபிவிருத்தியை கண்டு வருகிறது. இதற்கு ஒரு உதாரணமாக கொக்காவில் கோபுரம் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வசதிகள் யாவும் 35 வருடங்களின் பின்னர் இம்மக்களுக்குக் கிடைத்துள்ளது.

இதற்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களையும் நினைவு கூர வேண்டும்.

புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் எனக் கருதப்படுவர்கள் கூட இன்று புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். படிப்படியாக புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலிகள் விடுதலை பெற்று வருகின்றனர். இதுவரை 6924 பேர் விடுதலையாகியுள்ளனர்.

விடுதலையானவர்களை சமூகத்தில் நல்ல பிரஜையாக மிளிரச் செய்வதே அரசின் அடுத்தகட்ட செயற்பாடாகவுள்ளது.

இதே வேளை வெளிநாட்டில் செயற்பட்டு வரும் புலிகள் அமைப்பும், சில அரச விரோத சக்திகளும் ஒன்றிணைந்து இவர்களை மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளுக்குள் இழுக்க முற்படுகிறார்கள்.

புலிகளினால் மறைத்து வைக்கப் பட்டுள்ள வெடிபொருட்கள் ஆயுதங்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. புனர்வாழ்வு பெறும் புலி உறுப்பினர்களினூடாகக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

இதே போன்று மனிதாபிமான நடவடிக்கையின் போது புலிகள் இயக்கத்தை கைவிட்டு தென்பகுதிக்கு தப்பி வந்த புலிகள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களின் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் முக்கியஸ்தர்களை கைது செய்தல் வெடிபொருட்களை மீட்டல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் பாதுகாப்புக்காகவும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் இதை நாம் செய்ய வேண்டியது எமது பொறுப்பு என்பதை எமது அரசு உணர்ந்து செயற்படுகிறது.

சர்வதேச ரீதியில் கிடைத்த நிதியின் ஊடாகத்தான் புலிகள் அமைப்பு இயங்கி வந்தது. புலிகளுக்கு ஆதரவாக சர்வதேச மட்டத்தில் வலையமைப்புகள் இயங்கின. இதனூடாக மீண்டும் புலிகளை பலம் பெற வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும் பிரதமர் கூறினார்.

அத்துடன் சீனாவுக்கு விஜயம் செய்த போது சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி வழங்க முன்வருவதாக உறுதியளித்தாகவும் பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக