9 ஜூன், 2011

வட பகுதியை விட தென்பகுதி மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலேயே தீர்வு: அரசாங்கம்

புலிகளால் கேட்கப்பட்டதற்கிணங்கவோ அல்லது வெளிநாடுகளின் தேவைகளுக்கு ஏற்ற வகையிலோ அரசாங்கத்தினால் செயற்பட முடியாது. அத்துடன் வட பகுதி மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அல்ல. தென் பகுதி மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலேயே அரசியல் ரீதியிலான எந்தவொரு தீர்வையும் அரசாங்கத்தினால் வழங்க முடியும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று சபையில் தெரிவித்தார்.

தமிழக அரசாங்கம் எம்மீது எந்தவிதமான தீர்மானங்களை நிறைவேற்றினாலும் மத்திய அரசாங்கத்துடனான உறவு சுமுகமானதாகவே இருக்கின்றது. இந்தியா மட்டுமல்ல, அந்நாட்டு மக்களும் கூட இலங்கை அரசாங்கத்தைப் புரிந்து வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதத்தில் பதிலளித்து பேசுகையிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

பாராளுமன்றத்துக்குள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவம் தொடர்பில் நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அங்கு இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யாரென்பதையும் அதன் தூண்களாக செயற்பட்டவர்கள் யாரென்பதையும் பொலிஸாருக்கு ஏற்பட்ட நிலைமைகளையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

தமிழக அரசாங்கம் எமது நாட்டின் மீது பிரேரணை நிறைவேற்றியிருப்பதாக ரவி கருணாநாயக்க எம்.பி. இங்கு கூறினார். தமிழக அரசாங்கம் இவ்வாறு பிரேரணை நிறைவேற்றுவது புதிய விடயமல்ல. கடந்த காலங்களில் 1000 பேரை திரட்டிக் கொண்டு இலங்கைக்கு வரப் போவதாக முன்னாள் அமைச்சர் நெடுமாறன் எமக்கு அச்சுறுத்தல் விடுத்தார். எனினும் அதனை அலட்டிக் கொள்ளவில்லை. இந்தியாவுடனான எமது அரசாங்கத்தின் உறவு மிகவும் சுமுகமானதாக அமைந்திருக்கின்றது. அதேபோல் அங்குள்ள மக்கள் எம்மைப் பற்றி புரிந்து வைத்துள்ளனர்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மனதளவில் அரசாங்கம் ஒன்றை அமைத்து அமைச்சர்களையும் நியமித்திருக்கின்றார்கள். அதனை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. யுத்த வெற்றியை பெற்றுக் கொண்டதை போலவே இந்நாட்டில் நிலையான சமாதானத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச சக்திகளை புரிந்து செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை எதிர்வரும் 23 ஆம்திகதி இடம்பெறவிருக்கின்றது. கூட்டமைப்புடனான இந்தப் பேச்சுவார்த்தையை நேர்மையாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரசு எதிர்பார்க்கின்றது. அதேபோல் நிரந்தரமான சமாதானத்தையும் அரசியல் தீர்வையும் வழங்குவதற்கும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

எனினும் புலிகளால் கேட்கப்பட்டதற்கிணங்கவோ அல்லது வெளிநாடுகளின் தேவைகளுக்கு ஏற்பவோ எந்தவொரு தீர்வும் அமையாது. எமது நாட்டுக்கு ஏற்றவாறே எதனையும் வழங்க முடியும். அதேபோல் வட பகுதி மக்கள் மாத்திரம் மகிழ்ச்சியடையும் வகையில் தீர்வுகள் அமைய முடியாது. தென் பகுதி மக்களும் சந்தோசப்படும் விதத்திலேயே அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற தீர்வுகள் அமையும்.

ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டிருக்கின்ற வேளையில் இவ்வாறான சவால்களை எதிர்கொள்வது இயல்பானதாகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக