9 ஜூன், 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை" ஜெ ஜெயலலிதா



இலங்கைத் தமிழர்கள் அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்று, சிங்கள மக்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வழிவகைகள் காணப்படும் வரையில் இலங்கை அரசின் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படவேண்டும் எனக்கோரும் தீர்மானம் ஒன்று இன்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட்து.

விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டங்களில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக ஐ.நா நிபுணர் குழுவே கூறியிருக்கும் பின்னணியில், அத்தகைய குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் அவையினை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் அத்தீர்மானம் மேலும் கோருகிறது.

தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பவேண்டும் எனவும் அத்தீர்மானம் வற்புறுத்துகிறது.

மீனவர்கள் நலன்

கடந்த ஜூன் 3ம் தேதி மோசமான வானிலையால் இலங்கைக் கடற்பகுதிக்குள் தவறுதலாக சென்று கைதான தமிழக மீனவர்கள் 4 பேரை விடுவிக்குமாறு இலங்கையை வலியுறுத்தக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஜெயகுமார், பிரபாத், சுந்தர், மாரிமுத்து ஆகிய நால்வரும் புயலில் சிக்கி நைனாத் தீவுப் பகுதியில் கரை சேர்ந்தனர். அவர்கள் 3ம் தேதி ஊர்காவற்துறை போலீஸ் சோதனைச் சாவடியில் பின்னர் சரணடைந்தனர். ஜூன் 17ம் தேதிவரை அவர்கள் போலீஸ் காவலில் இருக்கவேண்டும் என் நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது.

அவர்கள் குறித்து இலங்கை அரசிடம் தகவல் அளித்து, அந்த 4 மீனவர்களையும் உடனடியாக தமிழகத்துக்கு மீட்டு வர இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக