9 ஜூன், 2011

இலங்கை அபிவிருத்தியடையும் வரையில் சகல உதவிகளையும் வழங்க சீனா உறுதி: பிரதமர்

இலங்கை மீதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் சீனா மிகுந்த நம்பிக்கையும் மதிப்பையும் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இலங்கை அபிவிருத்தி அடையும் வரையில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா உறுதியளித்திருக்கின்றது என்று பிரதமர் தி.மு. ஜயரத்ன நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துக் கொள்வதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 30 வருட பயங்கரவாதம் இலங்கையில் முறியடிக்கப்பட்டு விட்டாலும் கூட சர்வதேச அளவில் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் மீண்டும் எழுவதற்கு விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் எமக்கு கிடைத்திருக்கின்றன.

மேலும் புனர்வாழ்வு பெற்றுவரும் புலி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி வடக்கு கிழக்கில் தென்பகுதியிலும் கூட ஆயுதங்கள் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு தற்போது துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. கடந்த மாதத்தில் கொண்டாடப்பட்ட சம்புத்தத்துவ ஜயந்தியை கொண்டாடுவதில் மூவின மக்களும் இணைந்து கொண்டனர். 30 வருட பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதன் பின்னர் தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதற்காக இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் வடக்கு கிழக்கு அபிவிருத்தியடைந்து வருகின்றது என்பதை நிரூபிப்பதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொக்காவில் கோபுரம் சிறந்த உதாரணமாகும்.

அண்மையில் நான் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு பல தலைவர்களை சந்தித்தேன். அவர்கள் எமது ஜனாதிபதியை புகழ்ந்து பேசுகின்றனர். அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளனர்.

மேலும் எமது நாடு முழுமையான அபிவிருத்தி அடையும் வரையில் தேவையான அனைத்து வகையிலான உதவிகளையும் செய்வதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் எமக்கு உறுதியளித்திருக்கின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக