9 ஜூன், 2011

காணாமல் போனோரைக் கண்டுபிடிக்க கோரிக்கை


போராட்டத்தில் பங்குகொண்டோர்
காணாமல் போயுள்ளவர்களைக் கண்டு பிடித்துத் தரவேண்டும் என்றும், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதோடு அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா பேருந்து நிலையத்தின் எதிரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் இலங்கையர் என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களாகிவிட்டபோதிலும், யுத்தத்தின்போதும் அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

யுத்த காலத்திலும் அதற்கு முன்னரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் அவ்வாறு விடுதலை செய்யப்படாதவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட வேண்டும் என்பதுடன், அவர்களை விடுதலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோஷமிட்டு வலியுறுத்தினர்.

இலங்கையில் சுமார் 12 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் அரச தரப்பினால் இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவசக்தி டிலானி



சிவசக்தி டிலானி

சிவசக்தி டிலானி என்ற 15 வயது சிறுமியும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தார். தனது சகோதரன் சுற்றிவளைப்பு ஒன்றின்போது கொல்லப்பட்டதாகவும், தனது தந்தை கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போய் 4 வருடங்களாகிவிட்டதாகவும், அவரைப் பற்றிய தகவல் எதுவும் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அழுத வண்ணம் தெரிவித்தார்.

தாங்கள் எவருக்கும் எதுவும் செய்யாத போதிலும், தங்களுக்கு இந்தத் துயரம் நேர்ந்திருப்பதாகவும் பாடசாலை செல்ல வேண்டிய நேரத்தில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு வரநேர்ந்திருப்பதாகவும் அந்தச் சிறுமி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக