15 மார்ச், 2011

மீண்டும் ஒரு பிரேமதாசா யுகம் ஏற்பட வேண்டுமா? அமைச்சர் ஜகத் புஸ்பகுமார கேள்வி

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களி த்து பிரேமதாசா யுகமொன்றை மீண்டும் ஏற்படுத்த உதவுமாறு கேட்பது ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகளை மீண்டும் பலி கொடுப்பதற்கா? என்று தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கேள்வி எழுப்புகிறார்.

தனமல்வில, வெள்ளவாய, புத்தள ஆகிய பிரதேசங்களில் உள்ள கிராமங்களுக்கு மின்சார வசதியை வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஜகத் புஷ்பகுமார இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது, பிரேமதாச யுகத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

66 ஆயிரம் இளைஞர் யுவதிகளை பலி எடுத்த அந்த இருண்ட யுகம் மீண்டும் ஏற்பட நாட்டின் எந்தவொரு பிரஜையும் எந்த வகையிலான பங்களிப்பையும் வழங்கப் போவதில்லை.

அன்று அப்பாவி மக்களை கொலை செய்து மக்களுக்கு சேவை செய்வதற்காக இருந்த பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் விவசாய சேவை நிலையங்களுக்கு தீ வைத்து அழித்தவர்கள் இன்று விவசாயிகளைப் பற்றி பேசுவது கேலியாக உள்ளது என்று அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கூறினார்.

இது பற்றி மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டிய காலம் வந்துள்ளது. அதற்கான பதிலை எதிர்வரும் 17ஆம் திகதி மக்கள் வழங்குவார்கள்.

இன்று நாட்டில் சுதந்திரமும் அபிவிருத்தியும் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற தலைமைத்துவத்தின் காரணமாகவேயாகும். கிராமத்தில் இடம்பெறும் அபிவிருத்தியை சகித்துக் கொண்டிருக்க முடியாதவர்களுக்கு பல்வகை நோய்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

அரசாங்கத்தின் நோக்கம் அடுத்த சில வருடங்களில் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்பதாகும் என்று அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக