17 மார்ச், 2011

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை






தேமுதிக தலைவர் விஜயகாந்த்
எதிர்வரும் சட்டமன்றத்தேர்தல்களில் அஇஅதிமுக போட்டியிடவிருக்கும் 160 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் வெளியிட்டமையால் அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வியாழனன்று கூடி தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.

ஆனால் இவர்களிடையே கருத்தொற்றுமை எதுவும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அக்கட்சி போட்டியிட்டு வென்ற சில இடங்களிலும் போட்டியிட விரும்பும் வேறு பல இடங்களிலும் அஇஅதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளதாகக் குறை கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதே காரணங்களுக்காக அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்தது.

கூட்டணியில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் தான் போட்டியிட விரும்பிய 21 தொகுதிகளுக்கு ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் ஆத்திரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஓர் இடம் பெற்றுள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சேதுராமன் ஆகியோருக்கும் அதே போன்ற சிக்கல் இருக்கிறது.

இந்நிலையில் வியாழனன்று காலை தேமுதிக அலுவலகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சேதுராமன் ஆகியோர் சென்று விஜயகாந்துடன் அஇஅதிமுக பட்டியல் குறித்து விவாதித்தனர்.

வளாகத்தின் வெளியே தேமுதிக தொண்டர்கள் ஜெயலலிதாவை கண்டித்து முழக்கமிட்டனர். ஏதோ ஒரு உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. மூன்றாவது அணி உருவாகக்கூடும் எனப் பரபரப்பு எழுந்தது. ஆனால் தலைவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த விஜயகாந்த் எதுவாக இருந்தாலும் நாளை வெள்ளியன்றுதான் செய்தியாளர்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியனோ திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே தங்கள் லட்சியம் என்று கூறியதோடு நிறுத்திக்கொண்டார். மூன்றாவது அணியா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

அஇஅதிமுகவை தீவிரமாக ஆதரித்தும் இடங்கள் எதுவும் ஒதுக்கப்படாத மதிமுகவும் நேற்றைய அஇஅதிமுக பட்டியல் குறித்து மௌனம் காக்கிறது.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூட்டணி பெரும் சிக்கலில் மூழ்கியிருப்பதாகவும், அதனைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு கூட்டணித் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவிற்கு இருப்பதாகவும் நம்மிடம் தெரிவித்தார்.

மூன்றாவது அணிகான வாய்ப்பு மிகக் குறைவு, அப்படி ஒன்று உருவானால் அது திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பிரச்சினைகளைப் பேசித்தீர்த்துக்கொள்ளவே கட்சிகள் முயலும் என்கின்றனர் நோக்கர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக