17 மார்ச், 2011

ஜப்பான்: கதிர்வீச்சை தடுக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம் புகுஷிமா பகுதியில் தொடர்ந்து பதற்றம்




ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சை தடுக்கும் பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்காக 50 தொழில் நுட்பவியலாளர் களை அங்கு அனுப்ப ஜப்பான் அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக மூன்றாவது அணு உலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து புகுஷிமா அணுமின் நிலையத்தில் பணியாற்றிய 750 பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மூன்றாவது அணு உலையில் இருந்து தொடர்ந்தும் புகை கக்கி வருவதாக வும் அதன் உட் புறத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அணுமின் நிலையத்தை பராமரிக்கும் டோக்கியோ மின்சக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 5 மற்றும் 6 ஆவது அணு உலைகளிலும் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அணு உலைகளை குளிர்விப்பதற்காக அமெரிக்க இராணுவமும் உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புகுஷிமா அணு உலைகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து மக்கள் தொடர்ந்தும் பீதியில் உள்ளனர். கதிர்வீச்சு புகுஷிமாவில் இருந்து 240 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள தலைநகர் டோக்கியோ வரை எட்ட ஆரம்பித்துள்ளது. 4 ஆம் பிரிவில் தீ ஏற்பட்ட பின்னர் கதிர்வீச்சு காற்றில் கலப்பது அதிகரித்துள்ளது.

இதனால் டோக்கியோ நகரில் 18 பேரிடம் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்படுள்ளது.

எனினும், கதிர்வீச்சு அபாயப் பகுதியாக இருக்கும் புகுஷிமாவை அண்டிய 20 கிலோ மீற்றர் தூரப் பகுதி மேலும் அதிகரிக்கப்படாது என ஜப்பான் அரசு நேற்று அறிவித்தது. இந்த பகுதியில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் புகுஷிமா அணுமின் நிலையத்திற்கு அப்பால் 20 இல் இருந்து 30 மீற்றருக்குள் 140,000 பேர் அளவில் உள்ளனர்.

இதேவேளை, நேற்று பிந்திக் கிடைத்த தகவலின்படி சுனாமி அனர்த்தத்தினால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 4, 255 ஆக அதிகரித்திருந்தது. அத்துடன் இதுவரை 8, 194 பேரளவில் காணாமல் போயுள்ளதோடு 2, 282 பேர் காயமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக