17 மார்ச், 2011

234 உள்ஃராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல் 3036 உறுப்பினர்கள் தெரிவு: 29,108 பேர் போட்டி 7,396 நிலையங்களில் வாக்களிப்பு





வாக்களிப்புகாலையிலேயே வாக்களியுங்கள்

234 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது. 3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 29,108 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

3 மாநகர சபைகள், 30 நகர சபைகள், 201 பிரதேச சபைகளுக்கான தேர்தலில் 94 இலட்சத்து 38,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

7396 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளதோடு வாக்குகள் எண்ணுவதற்காக 1077 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புக் கடமைகளில் 50 ஆயிரம் பொலிஸாரும் 20 ஆயிரம் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று காலை முதல் தமக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று கடமைகளை பொறுப்பேற்றனர்.

வாக்குப் பெட்டிகளும் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்கள் தவிர்ந்த சகல பாடசாலைகளும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.

தேர்தல் மோசடிகள், வன்முறைகள் என்பவற்றைத் தடுக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் செயலகம் கூறியது. வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வீதிகளில் சுமார் 500 வீதித் தடைகள் இடப்பட்டுள்ளதோடு மோசடி இடம்பெறலாமென சந்தேகிக்கும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 33 கலக மடக்கும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏதும் வாக்களிப்பு நிலையங்களில் மோசடி இடம்பெற்றால் குறித்த வாக்களிப்பு நிலைய வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளார். வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிக்குமாறும் அவர் பொதுமக்களைக் கோரியுள்ளார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த சுமார் 9 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாக்களிக்கச் செல்வதற்காக விசேட இ. போ. ச. பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புத்தளம் மற்றும் வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள இவர்கள் மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவுக்கு வாக்களிக்கச் செல்வதற்காக தேர்தல் ஆணையாளரின் பணிப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு முதலாவது பெறுபேறு இரவு 11.00 மணியளவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ண போட்டிகள் காரணமாக 335 உள்ளூராட்சி சபைகளில் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வேட்பு மனு கோரப்பட்டது. இதில் 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றுக்கான தேர்தல் பின்னர் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக