17 மார்ச், 2011

ஜப்பானிய கதிர்வீச்சு காற்றின் மூலம் ரஷ்யா வரை பரவல்

புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்பை அடுத்து அணுக்கதிர்வீச்சு பரவும் வேகம் அதிகரித்துள்ளது.புகுஷிமா அணுமின் நிலையத்தின் இரண்டாவது நான்காவது ஆகிய இரு உலைகளில் செவ்வாயன்று வெடிப்பு ஏற்பட்டது.

அதேவேளை நான்காவது உலையில் தீ பிடித்ததுடன் எங்கும் ஐதரசன் புகை வெளியேறத்தொடங்கியது.கடந்த சனிக்கிழமை தொடக்கம் ஏற்பட்டுவரும் அணு உலை வெடிப்புக்களால் கதிர்வீச்சு அபாயமும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் ஜப்பானிய பிரதமர் நவாடோ கானும் கவலை வெளியிட்டிருந்தார்.

""பாதிக்கப்பட்ட அணு உலையிலிருந்து கதிர்வீச்சு கசியத் தொடங்கிவிட்டது.இது காற்று மண்டலத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.இதனால் பெரும் அபாயம் உள்ளது'' என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஜப்பானிய அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு காற்றில் பரவி தற்பொழுது ரஷ்யா, ஜப்பான் எல்லையில் இருக்கும் விளாடி வஸ்தக் நகரிலும் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து ரஷ்ய இராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளதுடன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுவருகிறது.அத்துடன் சீனா ஏற்கனவே ஜப்பானுக்கான தனது விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தின் அளவு 6 ரிச்டர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஜப்பானிய மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.நான்காம் எண் அணு உலையில் ஏற்பட்ட தீயை அடுத்து டோக்கியோ நகருக்குள்ளும் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பொதுமக்கள் சிலர் தலைநகர் டோக்கியோவிலிருந்தும் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் நான்காம் எண் அணு உலையில் இருந்த யுரேனியம் அல்லது புளுட்டோனியம் கம்பிகள் உருகி வெப்பம் வெளியேறி இருக்கலாம் எனவும் இதுவே அதிக கதிர்வீச்சுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை டோக்கியோ மின்சக்தி நிபுணர்கள் கருத்து வெளியிடுகையில்;ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி போரிக் அமிலத்தை அணு உலையில் ஊற்றி அதன் வெப்பத்தை தணிக்கலாம் என கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வு, சுனாமியை அடுத்து அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு பரவி வருகின்றது.அத்துடன் அணு உலைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் எந்தளவுக்கு நேர்ந்துள்ளது என்று குறிப்பாக கூறமுடியாது என கூறியுள்ள நிபுணர்கள் அதில் துவாரங்கள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது உருகி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

அணு உலைகளிலிருந்தும் வெளியாகும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்திருப்பதையடுத்து அங்கு கடமையில் இருந்த பணியாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வெளியேறியுள்ளனர்.

இதேவேளை 3 ஆம் எண் அணு உலையில் இருந்து புகை மேலெழுந்து வருவதாகவும் கடந்த இரு தினங்களில் இரண்டாவது தடவையாக நான்காம் அணு உலை வெடித்து தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இப்பகுதியில் நான்கு தடவைகள் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 8.9 ரிச்டர் என்று கூறப்பட்ட போதும் அது 9 ரிச்டர் என தற்பொழுது கூறப்படுகிறது.இதனிடையே கதிர்வீச்சு தொடர்பில் ஜப்பான் முறையான தகவல்களை வெளியிடவில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நேற்று புதன்கிழமை ஜப்பானிய அமைச்சரவை செயலர் யூக்சியோ எடோனோ கருத்து வெளியிடுகையில்; புகுஷிமா அணு உலைப்பகுதியில்கடமையில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்தும் வெளியேறியுள்ளதாக தெரிவித்தார்.

சுமார் 50 ஊழியர்கள் அங்கு கடமையாற்றி வருகின்றனர்.அதேவேளை தற்பொழுது அணுக் கதிர்வீச்சு அளவு குறைந்து வருவதாகவும் எடோனோ மேலும் தெரிவித்தார். இதேவேளை கியூடோ செய்திச்சேவை தகவலின்படி அணு உலைகள் கொதித்துக் கொண்டிருப்பதால் மேலும் கதிர்வீச்சு அச்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அணு உலைகள் வெடிப்பதை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடல் நீரையும் போரிக் அமிலத்தையும் ஹெலிகொப்டரிலிருந்து ஊற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக