17 மார்ச், 2011

தொகுதி ஒதுக்கீடு: வைகோவை கைவிட்டார் ஜெயலலிதா ம.தி.மு.க திண்டாட்டம்




தமிழக சட்ட சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. ஓரங்கட்டப்பட்டுள்ளமை ஜெயலலிதா- வைகோ அரசியல் உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா ம.தி.மு.க.வுக்கு 16 ஆசனங்களையாவது ஒதுக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ம.தி.மு.க.வுக்கு 8 ஆசனங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என அறிவித்திருப்பது வைகோவுக்கு பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்ற இறுதி முடிவை எடுப்பதற்காக ம.தி.மு.க.வின் முக்கியஸ்தர்கள் நாளை மறுநாள் 19ம் திகதி வைகோ தலைமையில் ஒன்று கூடி ஆலோசிக்கவுள்ளனர். ம.தி.மு.க. கூட்டணியிலிருந்து பல கட்சிகள் பிரிந்து சென்ற போதும் இறுதி வரை ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்த தம்மை அவர் ஏமாற்றிவிட்டார் எனவும்,

இதற்கு காரணம் விஜயகாந்த் - ஜெயலலிதாவுக்கிடையான புதிய கூட்டணி எனவும் ம.தி.மு.கவினர் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் தமக்கு 35 தொகுதிகளை வழங்குமாறு முதலில் ம.தி.மு.க. கோரியிருந்தது. எனினும் கடந்த தேர்தலில் 35 தொகுதிகளை வழங்கிய போதும் அதில் 8 தொகுதிகளிலேயே ம.தி.மு.க. வெற்றிபெற்றது என்பதை காரணம் காட்டிய ஜெயலலிதா அக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

இதனையடுத்து தமக்கு 25 தொகுதிகளையாவது வழங்குமாறு வைகோ இறங்கி வந்தார். அதனையும் ஜெயலலிதா ஏற்க மறுத்த நிலையில் குறைந்த பட்சம் 18 ஆசனங்களையாவது வழங்குமாறு கோரினார் வைகோ.

இருப்பினும் ம.தி.மு.க.வை நம்பி 18 தொகுதிகளை வழங்க முடியாது என்று கூறி 10 ஆசனங்களை மட்டுமே தரமுடியும் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஆசனங்களின் தொகை 10 இலிருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது மட்டுமின்றி அ.தி.மு.க. கூட்டணியில் புதிதாக இணைந்து கொண்ட விஜயகாந்தின் தே.மு.தி.கவுக்கு ஜெயலலிதா 41 தொகுதிகளை ஒதுக்கியுள்ளமை ம.தி.மு.க. வினரை மேலும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்வதா இல்லை பிரிந்து செல்வதா என்பது குறித்து முடிவு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்தை வைகோ நாளை மறுநாள் கூட்டுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக