31 ஆகஸ்ட், 2010

வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமம் : முல்லைத்தீவு மக்களை விரைவில் மீளக் குடியமர்த்துமாறு பசில் பணிப்பு






வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8607 குடும்பங்களையும் துரிதமாகக் குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் நேரில் சென்ற அமைச்சர் பசில் ராஜபக்ஷ மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்து ரையாடியுள்ளதுடன், மீள் குடியேற்றம் தொடர்பான சகல அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரைகளையும் வழங்கியுள்ளார்.

இச்சந்திப்பு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றதுடன் இதன் போது மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை யைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப் பட்டவர்களைக் கேட்டுக் கொண்ட அமைச்சர் கண்ணிவெடி அகற்றிய பகுதிகளில் உடனடியாக மீள் குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் நிவாரணங்களைத் தாமதமின்றி பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளைப் பணித்துள்ள அமைச்சர்; தற்காலிக வீடுகள் அமைப்பதை நிறுத்தி விட்டு அவர்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில் தெரிவித்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர்; முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறுநீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைத்து விவசாயத்திற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக மீள் குடியேற்றப்படாத பிரதேசங்களில் விரைவாக கண்ணிவெடிகளை அகற்றி மீள் குடியேற்றத்தை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டதாக அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக