31 ஆகஸ்ட், 2010

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் 160 எம். பிக்களின் ஆதரவு கிடைக்குமென்கிறார் மைத்திரிபால

உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மேற்படி திருத்தச் சட்ட மூலத்திற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதோடு உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதிய யாப்பு திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதியொருவர் இரு தடவைக்கு மேல் பதவிவகிக்க முடியாது என்ற சரத்து நீக்கப்பட்டு வரையறையின்றி எத்தனை தடவையும் போட்டியிட முடியும் என திருத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயம் பாராளு மன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் யாப்பு திருத் தப்படவுள்ளதோடு அரசியல மைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் குறித்து விளக்க மளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நேற்று காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.

உத்தேச திருத்தச் சட்ட மூலத்தை பிரதமர் டி. எம். ஜெயரத்ன அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார். யாப்புத் திருத்தத்தில் உள்ளடங்கும் விடயங்கள் குறித்து வெளி விவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அமைச்சரவைக்கு விளக்க மளித்தார்.

தற்பொழுதுள்ள யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி விரும்பிய போது பாராளு மன்றத்திற்கு சமுகமளிக்கலாம். ஆனால் புதிய திருத்தத்தின்படி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு தடவை கட்டாயம் ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க வேண்டும். பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் நபராக ஜனாதிபதி பதவியை மாற்றும் நோக்கத்துடனே இந்த புதிய திருத்தம் செய்யப்படவுள்ளது.

இது தவிர, ஜனாதிபதியாக 2 தடவை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தற்போதைய யாப்பில் வரையறுக்கப் பட்டுள்ளது. ஆனால் மக்கள் குறித்த நபர் தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும்.

அதற்கேற்ப ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடியவாறு அரசியல் யாப்பு திருத்தப்படவுள்ளது. இதனூடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.

இதேநேரம் 17ஆவது திருத்தச் சட்டத்திலும் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2001ம் ஆண்டில் ஜே.வி.பி.யுடன் இணைந்து அமைக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 17ஆவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது. அதில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் திருத்துவது மிக அவசியம்.

978ஆம் ஆண்டு யாப்பில் உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2001ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் படி அந்த அதிகாரம் ஜனாதிபதி, பிரமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், சிறுகட்சிகள் என கட்சி பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தாமதம் காரணமாக அரசியலமைப்பு சபையை இயங்க வைக்க முடியாமல் போனது.

இதனால் அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் யாப்பினூடாக அமைச்சரவைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அரசியலமைப்பு சபை உறுப்பினர்களின் தொகை 5ஆக குறைக்கப்படவிருக்கின்றது. உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரமும் அமைச்சரவைக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்றம் போன்றவற்றிற்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதியிடமே இருக்கும்.

புதிய திருத்தத்தின் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழுங்காக இயங்கும்.

நாட்டின் அபிவிருத்திப் பணிகளை ஒழுங்காக முன்னெடுக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதாக கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் நாம் உறுதி அளித்தோம். அதன்படி புதிய திருத்தங்கள் மேற்கொள்ளம் படவிருக்கின்றது.

உத்தேச அரசியலமைப்பு திருத்த மூலம் தொடர்பான விவாதம் 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெற்று அது நிறைவேற்றப்படும். யாப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் 160 எம்.பி. களை விட அதிகமானவர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. இதற்குத் தேவையான 2/3 பெரும்பான்மை பலம் எம்மிடமுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக