31 ஆகஸ்ட், 2010

வடமாகாண விவசாய அமைச்சு கிளிநொச்சிக்கு இடமாற்றம்

வட மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால் நடைகள், மீன்பிடி மற்றும் காணி அமைச்சும், அதன் கீழுள்ள சகல திணைக் களங்களும் நாளை (1) முதல் கிளிநொச்சி நகருக்கு இடமாற்றப்படுகின்றது.

இதற்கமைய நாளை புதன்கிழமை தொடக்கம் குறித்த அமைச்சும் அதன் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களும் கிளிநொச்சியிலிருந்து செயற்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் இந்த அமைச்சுக்கான அலுவலகமும், திணைக்களத்துக்கான கட்டடங்களும் புனரமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்ட பின்னரும் கூட வட மாகாண சபையின் சகல அமைச்சுக்களும் திணைக்களங்களும் திருகோணமலை, வரோதயர் நகரிலேயே இயங்கி வருகின்றன.

இந்நிலையில் தற்போது அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி வேலைத்திட்டம், விவசாயத்திட்டங்களை உரிய முறையில் உடனுக்குடன் நடை முறைப்படுத்தும் நோக்குடனே இந்த அமைச்சை உடனடியாக கிளிநொச்சிக்கு மாற்றத் தீர்மானித்ததாக அளுநர் மேலும் தெரிவித்தார்.

மாகாண அமைச்சின் செயலாளர் சி. பத்மநாதன் தலைமையில் அமைச்சின் செயற்பாடுகளும், விவசாய, நீர்ப்பாசன, கால்நடை, காணி ஆகிய திணைக்களங்களும் செயற்படவுள்ளன.

இம்முறை பெரும் போகத்தின் போது வட மாகாணத்தில் அதிக நெற்செய்கையை மேற்கொள்ளவும் மேலதிகமாக 40 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என் றும் வட மாகாண ஆளுநர் தெரி வித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக