31 ஆகஸ்ட், 2010

400 ஆண்டுகளுக்கு பின் சீறும் இந்தோனேசிய எரிமலை





கபன்ஜாஹே (இந்தோனேசியா), ஆக.30: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சினாபங் எரிமலை மீண்டும் சீற்றம் கொண்டுள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் சீற்றம் கொண்டு தனிந்த இந்த எரிமலை ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மீண்டும் சீற்றம் அடைந்துள்ளது.

திங்கள்கிழமை இரண்டாவது நாளாக எரிமலை தீக்குழம்பை கக்கியது. இதனால் அப்பகுதியை சுற்றி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

இதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும், எரிமலையின் அடிவாரத்தில் வசித்து வந்த மக்களும் அவசரமாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

எரிமலையில் இருந்து 6 கிலோ மீட்டர் சுற்றளவு வரை அபாயமான பகுதியாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனே வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு ஏற்படுத்தியுள்ள தாற்காலிக முகாம்களில் அடைக்கலம் அடைய தொடங்கியுள்ளனர். இதுவரை 3000 பேர் முகாம்களை வந்தடைந்துள்ளதாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எரிமலை சீற்றத்தால் 2,400 மீட்டர் உயரம் வரை புகை மூட்டம் காணப்படுகிறது. அப்பகுதி முழுவதும் அதிக அனலாகவும் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக விமானங்கள் செல்ல வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எரிமலை சீற்றத்தை பார்ப்பதற்கே பயமாக இருப்பதாகவும், எரிமலை புகை கலந்த காற்று சுவாசிப்பதற்கு நெடியுடையதாக இருப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1600-க்குப் பிறகு... சுமத்ரா தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சினாபங் எரிமலை கடந்த 1600-ம் ஆண்டு சீற்றம் கொண்டது. இதையடுத்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சீற்றமிக எரிமலை பட்டியலில் சினாபங்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் மொத்தம் 69 சீற்றமிகு எரிமலைகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக