12 ஜூலை, 2010

சிங்கப்பூரில் ரயிலில் கிறுக்கியவருக்கு பிரம்படி தண்டனை


சிங்கப்பூர் : பாதாள ரயில் பெட்டி மீது பெயின்ட் தெளித்து அலங்கோலப்படுத்திய வெளிநாட்டு இளைஞருக்கு, சிங்கப்பூர் கோர்ட் பிரம்படியும், சிறை தண்டனையும் விதித்தது.

சிங்கப்பூரில் பொது இடங்களில் தூய்மையை கடைபிடிக்கவும்,பொது சொத்துக்களை பாதுகாக்கவும் அந்நாட்டு அரசு கடும் நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. சிறிய குற்றங்களுக்கு கூட, கடும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. அங்குள்ள பாதாள ரயில் டெப்போவிற்குள் இளைஞர் ஒருவர் சமீபத்தில் கூட்டாளி ஒருவரின் உதவியுடன், அத்துமீறி நுழைந்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இரண்டு ரயில் பெட்டிகள் மீது பெயின்ட்டை தெளித்து, கிறுக்கி அலங்கோலப்படுத்தினார். இதை கண்ட டெப்போ ஊழியர்கள், அந்த இளைஞரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒலிவர் பிரிக்கர்(32)என தெரியவந்தது.இதையடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஒலிவர், திட்டமிட்டு குற்றம் புரிந்துள்ளார். எனவே கடும் தண்டனை வழங்க வேண்டும்' என வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுச்சொத்தை சேதப்படுத்திய ஒலிவருக்கு, மூன்று பிரம்படி தண்டனையும், ஐந்து மாத சிறை தண்டனையும் விதித்தார்.பின்னர் அவர் பிணையத் தொகை செலுத்தி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.ஒலிவருக்கு வழங்கப்பட்ட தண்டனை மிக அதிகம்; தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என, அவர் வழக்கறிஞர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மூன்று முதல் எட்டு பிரம்படி தண்டனை வழங்க, அந்நாட்டு சட்டத்தில் வழிவகையுண்டு.மேலும், அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க இயலும்.இதுபோன்ற, கடுமையான சட்டங்களால் சர்வதேச அளவில் சிங்கப்பூரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை, மிகமிக குறைவு.மேலும், சமூக பாதுகாப்பு மிக்க நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.

சிங்கப்பூரில், கடந்த 1994 ம் ஆண்டு பொது இடத்தில் தகராறு செய்த மைக்கேல் பே என்ற அமெரிக்க இளைஞருக்கு ஆறு பிரம்படியும், நான்கு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனையை குறைக்க அப்போதைய அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் பரிந்துரை செய்தும், அதை ஏற்க, சிங்கப்பூர் அரசு மறுத்துவிட்டது. மேலும் சிங்கப்பூரில் போதைபொருள் தொடர்பான குற்றங்களுக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் விதிக்கப்படும் தண்டனைகளை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக