த.தே.கூ-மு.காங்கிரஸ் தலைவர்கள்
தமது கட்சியுடன் கலந்தாலோசிக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி இந்தியாவுடன் பேசியது தவறு என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து செயற்பட வேண்டுமென்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தமது கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி இப்போதைக்கு பேசாமல் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு குறித்தே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இருதரப்பு சந்திப்பின்போது உடன்பாடு காணப்பட்டதாகவும் ஹாரிஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியே சிறுபான்மையினருக்கான அரசியல் தீர்வுத்திட்டம் பற்றிய நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என்ற தீர்மானத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிச் செல்வதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.
மேற்குலக நாடுகளின் நெருக்குதல்கள் காரணமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மேற்கொள்ளும் அரசியல் தீர்வு திட்ட முயற்சிகளில் இந்தியா செல்வாக்கு செலுத்தும் நிலை ஏற்படும் என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய தலைவர்களுடனான சந்திப்பை கவனத்தில் எடுக்காமல் விட முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹாரிஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக