12 ஜூலை, 2010

ஆக்டோபஸ்' கணிப்பு பலித்தது: உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின்




ஜோகனஸ்பர்க்: உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் பால் "ஆக்டோபஸ்' கணிப்பு மீண்டும் ஒரு முறை பலித்து உள்ளது. நெதர்லாந்து வெற்றி பெறும் என்ற சிங்கப்பூர் கிளியின் கணிப்பு பொய்யாகிப் போனது.

தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்த பைனலில் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், நெதர் லாந்தை(4வது இடம்) எதிர் கொண்டது. இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை கைப்பற்றும் குறிக்கோளுடன் களமிறங்கின.

ஸ்பெயின் ஆதிக்கம்: துவக்கத்தில் "யூரோ' சாம்பியனான ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் "பிரீகிக்' வாய்ப்பில் சேவி, பந்தை அடித்தார். அதனை செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோல் அடிக்க பார்த்தார். ஆனால், நெதர்லாந்து கோல் கீப்பர் மார்டன் ஸ்டகலன்பர்க் துடிப்பாக தடுக்க, வாய்ப்பு நழுவியது. 11வது நிமிடத்தில் மீண்டும் ரமோஸ் தாக்குதல் நடத்தினார். இம்முறை நெதர் லாந்து தற்காப்பு பகுதி வீரர் ஹெடிங்கா, பந்தை உதைத்து வெளியே அனுப்பினார். பின் நெதர்லாந்து வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் மோதிப் பார்க்க, இங்கிலாந்து நடுவர் ஹாவர்டு, மாறி மாறி "எல்லோ கார்டு' காட்டி எச்சரித்தார். நெதர் லாந்து தரப்பில் பெர்சி, பொம்மல் மற்றும் ஸ்பெயின் சார்பில் ரமோஸ், புயோல் "எல்லோ கார்டு' பெற்றனர்.

ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர் லாந்து வீரர் நிஜல் டி யாங்கும் "எல்லோ கார்டு' பெற்றார். முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இரண்டாவது பாதியிலும் "அடிதடி' ஆட்டம் தொடர்ந் தது. 54வது நிமிடத்தில் "பவுல்' செய்த நெதர்லாந்து கேப்டன் பிரான்க்ஹார்ஸ்ட் "எல்லோ கார்டு' பெற்றார். 62வது நிமிடத் தில் நெதர்லாந்தின் ராபன், பந்தை மின்னல் வேகத்தில் கடத்தி வந்து "ஷாட்' அடித்தார். ஆனால், ஸ்பெயின் கீப்பரும் கேப்டனுமான கேசில்லாஸ் சாதுர்யமாக தடுக்க, பொன் னான வாய்ப்பு வீணானது.

டேவிட் ஏமாற்றம்: இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா இம்முறை ஏமாற்றம் அளித்தார். 69, 76வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை வீணாக்கினார். பின் ஸ்பெயின் வீரர் ரமோஸ் தலையால் முட்டி அடித்த பந்தும் இலக்கு மாறி பறந்தது. எங்கே ஸ்னைடர்: ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ராபன் அசுர வேகத்தில் ஓடி வந்து கோல் அடிக்க பார்த்தார். அப்போது ஸ்பெயின் வீரர் புயோல் தடுக்க, வாய்ப்பு பறிபோனது. இதையடுத்து நடுவருடன் வாதாடினார் ராபன். இதற்காக ராபனும் "எல்லோ கார்டு' பெற்றார். இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள நெதர்லாந்தின் ஸ்னைடரின் ஆட்டம் சுத்தமாக எடுபடவில்லை. இவர் இருக்கும் திசையில் பந்து வருவதே அரிதாக இருந்தது. இரு பாதி முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

"ரெட் கார்டு' சோகம்: இதையடுத்து போட்டி, கூடுதல் நேரத்துக்கு சென்றது. 106வது நிமிடத்தில் ஸ்பெயின் சார்பில் டேவிட் வில்லாவுக்கு பதிலாக பெர்ணான்டோ டோரஸ் களமிறக்கப்பட்டார். 109வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டாவை முரட்டுத்தனமாக தடுத்த நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப் பட்டார். இதையடுத்து 10 பேருடன் நெதர்லாந்து விளையாட நேர்ந்தது.

ஸ்பெயின் கோ...ல்:ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஒரு சூப்பர் கோல் அடித்து, அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பை கைப்பற்றியது. கடந்த 1974, 78 பைனலில் தோல்வி அடைந்த நெதர் லாந்து அணி மூன்றாவது முறையாக கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டு, இரண்டாம் இடம் பிடித்தது.

ரூ. 142 கோடி பரிசு: உலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணி ரூ. 142 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. 2ம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி 113 கோடி ரூபாய் பரிசாக பெற்றது.

முரட்டு ஆட்டம்: இரு அணி வீரர்களும் முரட்டு ஆட்டம் ஆடியதால் "எல்லோ கார்டு' மயமாக இருந்தது. இதில் இரு முறை "எல்லோ கார்டு' பெற்ற நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' சோகத்தை சந்தித்தார். நெதர்லாந்து சார்பில் 8 மற்றும் ஸ்பெயின் தரப்பில் 5 சேர்த்து மொத்தம் 13 வீரர்கள் "எல்லோ கார்டு' பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக