29 ஜூன், 2010

கூட்டுச் செயற்பாடு பற்றி சம்பந்தனுடன் சிவாஜிலிங்கமும் சித்தார்த்தனும் பேச்சு





இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாடு மற்றும் மக்கள் விரும்பும் பொது நிலைப்பாடு ஆகியவை தொடர்பாக ஆராய்வதற்காக ஏழு தமிழ் கட்சிகள் கூட்டிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இக்கட்சிகளின் சார்பாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் நேற்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியை சந்தித்து இந்த அழைப்பினை விடுத் துள்ளனர்.

இச்சந்திப்பு சம்பந்தன் எம்.பியின் வீட்டில் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சுமார் அரை மணித்தியாலம் இச்சந்திப்பு நீடித்ததாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க முடியுமா என்பது தொடர்பாகவும் மக்கள் விரும்பும் வகையில் பொது நிலைப் பாட்டினை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பது குறித்தும் தற்போது ஏழு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்து வருகின்றன.

இக்கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஏனைய தமிழ் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் எம்.பி. கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, முதலமைச்சர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த முயற்சியாகவே நேற்று சம்பந்தன் எம்.பியை சந்தித்து அழைப்பு விடுத்திருப் பதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.

சந்திப்பின் போது சம்பந்தன் எம்.பி. இது தொடர்பாக தன்னுடன் ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியிருப்பதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தமது கட்சியின் இறுதி முடிவை அறிவிப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸணுடன் உரையாடுவதாகவும் தெரிவித்ததாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

மற்றைய இரண்டு கட்சிகளுடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப் போவதாக சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக