30 மே, 2010

வன்னி மக்கள் நலன்கருதி மா.ச. தேர்தலில் ததேகூ போட்டி :




அரியநேத்திரன் முகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை விடிவை ஏற்படுத்திக்கொடுப்பதை வலியுறுத்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஐபக்ஷ நேற்று தெரிவித்திருந்தார். இதையொட்டி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும்,

"வடக்கில் குறிப்பாக வன்னியில் பெருந்தொகை மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களிலும் புனர்வாழ்வுக் கிராமங்களிலும் வசிக்கிறார்கள். இந்த நிலையில் அந்த பிரதேசத்தில் தற்போது தேர்தல் நடத்துவதானது விரும்பத்தக்கதல்ல. இதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

மாறாக ஒரு தேர்தலை நடத்தி அரசு தனது இருப்பை நிரூபிக்க எத்தனித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த தேர்தலில் பங்குபற்றுவது தவிர்க்கமுடியாததொன்றாக அமைந்துவிடும்.

அத்துடன், கடந்த வாரம் வன்னிக்குச் சென்றிருந்தோம். அந்த மக்களின் அவலங்களை நேரில் கண்டோம்.

சர்வதேசத்துக்கு அரசு கூறிவருவது போன்று அங்கு எதுவும் நடக்கவில்லை. மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசு ஏமாற்று நாடகத்தையே அரங்கேற்றி வருகிறது. இதனை அம்பலப்படுத்தவும் அந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாம்.

அல்லற்படும் அந்த மக்களின் அவலங்களுக்கு ஏற்ற தீர்வைப் பெற்றுக் கொடுக்கவாவது வடக்கு மாகாண நிர்வாகத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியாக வேண்டும். அந்த நிர்வாகத்தைக் கைப்பற்றுவதன் மூலம் வன்னி மக்களின் அவலங்களுக்கு முடிவைக் காணலாம். சர்வதேசத்துக்கு அரசு அறிவித்து வருவது போன்று மக்கள் வன்னியில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. இன்னமும் அகதி நிலையிலேயே அந்த மக்கள் பசி, பட்டினியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த மக்களுக்கு விடிவு கிடைத்து சகஜவாழ்வுக்கு அவர்கள் திரும்ப, மாகாண சபைத் தேர்தலைப் பயன்படுத்தவேண்டிய தேவையுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக