30 மே, 2010

சிலாவத்துறையில் சிலர் கைது என்ற செய்தி உண்மையில்லை:பொலிஸ் தரப்பு

சிலாவத்துறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலமையிலான குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பெயரில் சிலர் கைது செய்யப்பட்டார்கள் என வெளியான தகவல்களில் உண்மை இல்லை எனப் பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளை மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கும் பொருட்டு இம்மாதம் 27ஆம் திகதி வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்ட பின், அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிலாவத்துறைப்பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன் போது குறித்த பிரதேசத்தில் மீள்குடியேறியிருக்கும் மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் கோரிக்கை முன் வைப்பதற்காகக் காத்திருந்தனர்.

ஆயினும் குறித்த பிரதேசம் கடற்படையினரின் பாதுகாப்புக்குட்பட்ட பகுதியாக இருந்ததால் பிரதேசவாசிகள் தமது கோரிக்கையைச் சமர்ப்பிக்க எடுத்த முயற்சி பலனற்றுப் போனது. இந்நிலையில், அவர்கள் தாம் கொண்டு சென்ற கோரிக்கையடங்கிய மகஜரைத் தலைக்கு மேல் உயர்த்தி அமைச்சரின் பார்வைக்குக் காட்டியிருக்கின்றனர்.

இச்சம்பவம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதனாலேயே பிரதேசவாசிகளில் சிலர் பொலிஸ் விசாரணைகளுக்கு உள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் பொலிஸ் தரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எனச் சொல்லப்பட்டவர்களிடமிருந்து சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக