30 மே, 2010

முல்லையில் கண்ணிவெடி அகற்றப்படும்வரை மீள்குடியேற்றமில்லை: அமைச்சர்

"யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதிமுகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியாது. அந்த மாவட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டமை தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அவர்களை மீளக்குடியேற்ற முடியும்" என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

"இந்த மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கின்றனர். இவற்றை அகற்றும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே அதிகளவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளமை இப்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும் அந்த மாவட்டத்தில் கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து உத்தியோகபூர்வமான அறிக்கை எமக்குக் கிடைத்த பின்னரே அகதி முகாம்களிலுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற முடியும்.

இதற்கு இன்னும் ஒரு மாத காலமேனும் தேவைப்படலாம்.

வவுனியாவிலுள்ள ஆறு நலன்புரி வலயங்களில் ஒன்றினை இன்னும் இரண்டொரு தினங்களில் நாம் மூடவுள்ளோம். மீதியாக ஐந்து வலயங்களே உள்ளன. இவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவரையும் குடியேற்றிய பின்னர் இந்த வலயங்களையும் மூடக்கூடியதாகவிருக்கும்.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு வழங்கப்படும் கூரைத் தகடுகள் இந்தியாவிலிருந்தே எமக்குக் கிடைக்கின்றன. கூரைத் தகடுகளை ஏற்றிய கப்பல்கள் இந்தியாவிலிருந்து கொழும்பை வந்தடைந்ததும் அவற்றினைத் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்குத் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அந்தந்தப் பிரதேச செயலகங்கள் ஊடாக கிராம சேவகரிடம் இவை ஒப்படைக்கப்படடு மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்படும். மேலும், கடந்த காலங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் உதவியுடனேயே அரசாங்கம் ஆறுமாத காலத்துக்கான நிவாரணங்களை வழங்கி வருகிறது.

இவை முடிவுறும் நிலையிலிருந்தாலும் அவற்றினைத் தொடர்ந்து வழங்குவது குறித்து உலக உணவுத் திட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பெரும்பாலும் இது சாத்தியப்படும்" எனவும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக