25 மார்ச், 2010

ஊ.சே. நிதிய உறுப்பினர் நிலுவைகளுக்கு 13.75 வீதமாக வட்டி அதிகரிப்பு




*30% வீத வீடமைப்பு உதவித் தொகை

*இணையம் மூலம் தொடர்புகொள்ள திட்டம்

*தேசிய அடையாள அட்டை இலக்கங்களையே பயன்படுத்த ஆலோசனை

*சுயதொழிலில் ஈடுபடுவோரையும் சேர்க்க தீர்மானம்

ஊழியர் சேமஇலாப நிதியம் 2009இல் அதன் உறுப்பினர் நிலுவைகளுக்கான வட்டி வீதத்தினை முன்னெப்போதும் இல்லாத வகையில் 13.75 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக வாழ்க்கைத் தொழில், தொழில் உறவுகள் அமைச்சர் அத்தாவுட செனவிரட்ன நேற்று தெரிவித்தார்.

இது, அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.55 சதவீத அதிகரிப்பாகு மெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னொருபோதும் இல்லாத வகையில் ஊழியர் சேமஇலாப நிதிய நிலுவைகளுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் வட்டி வீதத்தினை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்றது. இம் மாநாட்டில் அமைச்ச ருடன் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், அமைச்சின் செயலாளர், ஊ. சே. நி. ஆணையாளர், ஊ. சே. நி. சுப்ரின்டன்ட், மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கடந்த 50 வருட காலமாக இயங்கி வரும் ஊழியர் சேமஇலாப நிதியத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக இதுவரை எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. அந்த வகையில் சிறப்பாக இதன் நிர்வாகம் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. தமது சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் பிரஜைகள் பெறுமதியடைய வேண்டும் என்ற நோக்கிலேயே 2009 ஆம் ஆண்டிலுள்ள நிலுவைகளுக்கான வட்டி வீதத்தினை முன்னொருபோதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அன்று 12 மில்லியன் ரூபாவுடன் ஆரம்பிக்கப்பட்ட ஊழியர் சேமஇலாப நிதியத்தில் தற்போது 769 பில்லியன் ரூபா நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், நிதியத்தில் 2.3 மில்லியன் உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிப்பது அதன் மீதான நம்பிக்கையினை அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கை யில் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், ஊழியர் சேமஇலாப நிதியத்தில் வைப்பி லிடப்படும் நிதியானது பரந்தளவில் முதலீடு செய்யப்பட்டிருப்பதுடன், அதிலிருந்து கிடைக்கும் வருமானம் அதிகரித்திருப் பதாலும், நிர்வாக செயற்பாடுகளுக்கான செலவீனம் குறைந்திருப்பதாலும் முன் னொருபோதும் இல்லாத வகையில் அதி உயர் வட்டி வீதத்தை வழங்கக்கூடிய தாகவிருக்குமென்றும் தெரிவித்தார்.

மேலும் 2009 ஆம் ஆண்டின் நிலுவைக் கான வட்டி வீதமான 13.75 சதவீதத்தை அவ்வருடத்துக்கான 3.4 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும் போது, அதன் உறுப்பினர்கள் பெறும் வட்டியின் அவ் வருடத்துக்கான உண்மைப் பெறுமதி 10.01 சதவீதமாகுமெனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் முன்னெடுக்கப்படும் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் செயற்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.

ஊழியர் சேமஇலாப நிதியத்திலுள்ள தனது கணக்கிருப்பை ஒருவர் கையடக்கத் தொலைபேசியின் குறுந்தகவல் சேவை யினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஊழியர் சேமஇலாப நிதியத்தின் காரியாலயத்துக்கு வரும் ஒருவருக்கு கூடிய விரைவில் அவருக்கு தேவையான வசதிகள் மற்றும் அறிக்கைகள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படுகிறது. ஒரு வரது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் கை விரல் அடையாளம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகிறது.

இதேவேளை, எதிர்காலத்தில் ஒருவர் தனது வீட்டிலிருந்த வண்ணம் நேரடி இணையத்தள சேவையின் மூலம் தனது தேவையினை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

சுய தொழிலில் ஈடுபடுவோரை ஊக்கு விக்கும் வகையில் விசேட சேமஇலாப நிதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஓய்வுபெற்றவர்கள் ஊழியர் சேமஇலாப நிதியப் பணத்தை கோல்டன் கீ போன்ற ஏமாற்றும் நோக்கமுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதனை தவிர்ப்பதற்காக அதே நிதியத்தில் மீள் வைப்பிடும் முறைமையை ஆரம்பிக்க தீர்மானித் துள்ளோம். இதற்கு 10 சதவீத வட்டி வழங்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, எதிர்காலத்தில் குளறுபடி களையும் கால தாமதத்தையும் தவிர்ப்பதற்காக ஊ. சே. நி. இலக்கமாக அவரவரின் தேசிய அடையாள அட்டை இலக்கமே நடை முறைக்கு கொண்டுவரவிருப்பதனையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் வெளிநாடுகளில் தற்போது 20 இலட்சம் இலங்கையர்கள் வசித்து வருவதனால், அவர்களையும் ஊ. சே. நிதியத்தில் பணத்தை வைப்பிலிடச் செய்யும் வகையில் இலங்கை மத்திய வங்கி தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அதன் ஆளுநர் கப்ரால் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக