21 மார்ச், 2010

தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்



கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளி யெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது.

கி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.

வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது.

கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலயச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள் இவ்வாலயச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.

01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பொது மக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.

02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.

03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது.

அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ஆம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது.

இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.

இவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.

தங்கராஜ் ஜீவராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக