21 மார்ச், 2010

கீழ்நிலை ராணுவ அதிகாரிகள் என்னை விசாரிக்க முடியாது: சரத் பொன்சேகா




:

கொழும்பு, மார்ச் 20: ராணுவத்தில் நான்கு நட்சத்திர அந்தஸ்துடன் உயர் பதவி வகித்த என்னிடம் கீழ்நிலை ராணுவ அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. என்னைவிட பதவி குறைந்த அதிகாரிகள் மூலம் என்னிடம் விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா மனு தாக்கல் செய்துள்ளார்.

ராணுவப் பதவியில் இருந்து நான் ஓய்வு பெற்று 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் என்னிடம் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. ராணுவ நீதிமன்றத்தில் என்னிடம் விசாரிக்கும் அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் பொன்சேகா தனது மனுவில் கோரியுள்ளார்.

அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எதிராக கொலை சதித் தீட்டம் தீட்டினார் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவை இலங்கை அரசு கைது செய்தது. அவர் முன்னாள் ராணுவ உயர் அதிகாரி என்பதால் அவரை ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

சரத் பொன்சேகாவிடம் அவரைவிட பதவி குறைந்த கீழ்நிலை ராணுவ அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா அந்தஸ்துக்கு நிகரான அதிகாரியோ அல்லது அவரது பதவியைவிட உயர்ந்த அதிகாரியோ இலங்கை ராணுவத்தில் இல்லை. இதனால் கீழ்நிலை அதிகாரிகளே அவரிடம் விசாரணை நடத்துவர். இதற்கு ராணுவ சட்டமும் அனுமதிக்கிறது என்று இலங்கை அரசு கூறியது.

ஆனால் இலங்கை அரசின் இந்த முடிவால் சரத் பொன்சேகா கோபம் அடைந்துள்ளார். தன்னைவிட பதவி குறைந்த அதிகாரி தன்னிடம் விசாரிக்க முடியாது என்று கூறி அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால் சரத் பொன்சேகாவின் மனுவை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு நீதிபதி சொந்தக் காரணத்தால் விசாரணைக் குழுவில் இருந்து விலகினார். இதனால் பொன்சேகாவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக