21 மார்ச், 2010

உலக வளர்ச்சிக்கேற்ப நாட்டையும் மக்களையும் உயர்த்துவதே எமது நோக்கம்




நுவரெலியாவில் ஜனாதிபதி உரை
மலையக மறுமலர்ச்சிக்கென விசேட கருத்திட்டம்பெருந்தோட்ட தரிசு நிலங்களை பகிர்ந்தளிக்க முடிவுஉலக வளர்ச்சிக்கேற்ப நாட்டையும் நாட்டு மக்களையும் உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான பலமான பாராளுமன்ற பலத்தைப் பெற்றுத்தர சகலரும் ஆதரவு வழங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன, மத, குல, மாகாண பேதமின்றி ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே நீதி என்ற ரீதியில் ஆட்சி செலுத்துவதே தமது நோக்கமெனவும் தெரிவித்த ஜனாதிபதி குறுகிய அரசியல் நோக்கங்களுக்கப்பால் சகலருக்கும் சம உரிமை சம அந்தஸ்து வழங்குவதே தமது கொள்கையெனவும் தெரிவித்தார்.

மலையக மக்கள் ஏனைய பகுதி மக்களைப் போன்றே சகல உரிமைகளையும் பெற்று வாழ வேண்டியவர்கள். அதனை நிறைவேற்றுவது தமது பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நுவரெலியா குதிரைப் பந்தயத்திடல் மைதானத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமான், சீ. பி. ரத்நாயக்க, நவீன் திசாநாயக்க உட்பட அமைச்சர்கள் வீ. புத்திரசிகாமணி, அருள்சாமி, ராதாகிருஷ்ணன் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

முழு உலகமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதற்கான பொறுப்பினை நாம் நம் நாட்டு விவசாயிகளிடம் வழங்கினோம். எரிபொருள் விலையேற்றம், உணவு நெருக்கடி, பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தின் போதும் நாம் நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தினோம். தற்போது துறைமுகங்கள் விமான நிலையம், மின்சார உற்பத்தி நிலையங்கள் என பாரிய அபிவிருத்தியினை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.

கடந்த காலத்தில் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் மக்களுக்கு உணவு வழங்குவதற்காகவே வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றனர். நாம் அவ்வா றில்லை. அபிவிருத்திக்காக, கல்விக்காக, சுகாதாரத்திற்காகவே கடன்களைப் பெற்றுள்ளோம். உலக முன்னேற்றத்திற்கேற்ப எமது மக்களையும் நாட்டையும் முன்னேற்றுவதே எமது முக்கிய நோக்கம். எதிர்காலத்தில் இதற்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பலமான பாராளுமன்றம் அவசியம். பெரும்பான்மை பலத்துடன் அதனை நாம் பெற்றுக் கொள்ள பொதுத் தேர்தலில் மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்குவது அவசியம். வெற்றிலைக்கு வாக்களித்து ஏனைய மூன்று வாக்குகளையும் தவறாது மக்கள் தமது விருப்பமான பிரதிநிதிகளுக்கு வழங்கலாம். நுவரெலியா மாவட்டத்தில் பத்து வேட்பாளர்கள் எமது சார்பில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு வழங்கும் வாக்குகள் எமக்கு வழங்கும் வாக்குகள் என்பதை மக்கள் மறந்து விடகக் கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக