21 மார்ச், 2010

அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம்: அமெரிக்கா, ரஷியா கையெழுத்து



:

அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், ரஷியாவும் கையெழுத்திட உள்ளன. இரு நாடுகளிடையிலான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இத்தகவலை ரஷியாவிலிருந்து வெளியாகும் நாளிதழ் "கோமர்சன்ட்' தெரிவித்துள்ளது.

செக்கோஸ்லோவோகியா தலைநகர் பிராகில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் கையெழுத்திட உள்ளனர்.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்வது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் ஜெனீவாவில் பேச்சு நடத்தியுள்ளனர்.

அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே 1991-ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பரில் காலாவதியானது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் ரஷிய அதிபர் திமித்ரி மெத்வதேவ்ஆகியோர் புதிய ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இரு நாடுகளிடமும் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 1,500 முதல் 1,675 ஆகக் குறையும்.

அடுத்த மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் அணுசக்தி மாநாட்டை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் இரு நாட்டு தலைவர்களும் உறுதியாக உள்ளனர்.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு கீவ் தீவு தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது பிராக் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா நடத்த உள்ள மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க உள்ளார். இதனாலேயே அணு விபத்து மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக