21 மார்ச், 2010

வாக்காளர் அட்டை விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

தபால் அலுவலகங்கள், தபால்காரர்களுக்கு விசேட பாதுகாப்பு
பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களையும் சேர்ந்த தெரிவத்தாட்சி அலுவலர்களினால் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதிவரை வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாதம் 28ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினமாக உள்ள போதிலும் வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக பிரகடனம் செய்யப்பட்டு ள்ளது.

வாக்காளர் அட்டை விநியோகத்தின் போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் போது வீதிகளில் விசேட ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள துடன் தபால் அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, தபால் வாக்களிப்புக்கான தபால் வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூல வாக்களிப்புக்காகத் தகுதி பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக