9 மார்ச், 2010

எந்த விசாரணைக்கும் ஐ.நாவுக்கோ சர்வதேசத்துக்கோ இடமளியோம்:சம்பிக




இலங்கை தொடர்பான எந்தவொரு உள்ளக விசாரணையையும் மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கோ சர்வதேசத்துக்கோ இடமளிக்க மாட்டோம். இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளமைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்.

எனினும் இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை அவரே எடுக்கவேண்டும் என்று சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை அமைப்பதன் மூலம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐ.நா. சாசனத்தை மீறிவிட்டார் என்றும் அவர் சொன்னார்.

அங்கத்துவ நாடு ஒன்றின் உள்விவகாரங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு ஆலோசனை கூறுவதற்காக ஆலோசனை குழு ஒன்றை நியமிப்பது ஐ.நாவை ஸ்தாபித்தவர்கள் தற்போதைய நிர்வாகத்திடமிருந்து எதிர்பார்க்கும் ஒரு செயல் அல்ல என்றும் கூறிய அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பான் கீ மூனுடன் தொலைபேசியில் பேசியபோது இலங்கை எந்தவொரு சர்வதேச அல்லது உள்ளூர் சட்டத்தையும் மீறாதபடியால் இத்தகைய ஆலோசனை குழுவொன்றை அமைப்பது குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது

இலங்கை தொடர்பான எந்தவொரு உள்ளக விசாரணையையும் மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கோ சர்வதேசத்துக்கோ இடமளிக்கமாட்டோம். அவ்வாறு இடமளிக்க முடியாது. ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்திலும் இந்த போக்கை நாங்கள் கடைப்பிடித்தோம். அதாவது குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையாக எம்மிடம் வினவினால் நாங்கள் அதற்கு பதிலளிக்கத் தயாராக இருக்கின்றோம். மனித உரிமைகள் அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் விசாரணைகளுக்கு இடமில்லை.

எனவே இவ்வாறான சர்வதேச சதித்திட்டங்களுக்கு எதிர்வரும் எட்டாம் திகதி நாட்டு மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

மீண்டும் ஒருமுறை எமது நாட்டின் இறைமையை மீறும் வகையிலும் நாட்டை மீட்டெடுத்த இராணுவத்தினரை களங்கப்படுத்தும் ரீதியிலும் சில தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகின்றது. இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆலோசனை பெற்றுக்கொள்ள நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

எமது நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுகின்றமை குறித்து நாங்கள் அவதானம் செலுத்தவேண்டும். இதற்கு முன்னர் பலஸ்தீனின் காஸாவில் இடம்பெற்ற யுத்தம் குறித்து இஸ்ரேல் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் இவ்வாறான ஆலோசனை குழுவை நியமித்திருந்தார்.

ஆனால் இன்று சில நாடுகள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவருகின்றன. ஈராக்கில் இதுவரை ஆறரை இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாகியுள்ளனர். எனவே இந்த நாடுகளில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு காரணமான நாடுகள் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு ஏன் ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் குழுவை நியமிக்கவில்லை?

எனினும் ஐ.நா. செயலாளருடனான தொலைபேசி உரையாடலின்போது விசேட நிபுணர் குழு விவகாரத்துக்கு எமது ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். இவ்வாறானதொரு தலைவர் எமக்கு கிடைத்துள்ளமை தொடர்பில் பெருமையடைகின்றோம். தற்போதைய நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டில் ஆட்சியில் இருந்திருந்தால் ஐ.நா. வின் .இந்த விடயம் தொடர்பில் வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கும்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் இலங்கை தொடர்பில் விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேசத்தை வலியுறுத்தி வருகின்றன. மேலும் சில நாடுகளின் உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப இலங்கை குறித்த விசாரணையை நடத்துமாறு கோருகின்றன. ஆனால் எந்தவொரு விசாரணைக்கும் இடமளிக்கமாட்டோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எதிரணி வேட்பாளர் வெளியிட்ட வெள்ளைக்கொடி சம்பந்தப்பட்ட விடயமே இவ்வாறான முயற்சிகளுக்கு காரணமாகும்.

மேற்குலக நாடுகள் பொருளாதாரத்தில் கடந்த வருடம் மறைபெறுமானத்தை அடைந்தன. ஆனால் எந்தவொரு ஆசிய நாடும் மறை பெறுமானத்துக்கு கடந்த வருடம் செல்லவில்லை. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகள் அபார வளர்ச்சியை பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக