9 மார்ச், 2010

இராணுவ நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் குழுவை ஜனாதிபதி அல்லது இராணுவ தளபதி நியமிப்பார்



ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி நியமிப்பார் அல்லது அவரது ஆலோசனையின் பிரகாரம் இராணுவ தளபதி நியமிப்பார் என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் முப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் ஐந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் 22 பேர், ஆறு பொலிஸார் மற்றும் சிவிலியன்கள் ஆறுபேர் அடங்கலாக 35 பேர் சாட்சியமளித்துள்ளனர் என்றும் அவர் சொன்னார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இராணுவ தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது

இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களை நெறிப்படுத்தும் நடவடிக்கை முற்றாக நிறைவு பெற்ற நிலையில் அது தொடர்பான அறிக்கை இராணுவ தளபதியிடம் கடந்த வார இறுதியில் கையளிக்கப்பட்டது.

35 சாட்சியங்கள்

அந்த வகையில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக 35 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் இராணுவ தரப்பைச் சேர்ந்த 22 பேர், பொலிஸ் தரப்பிலிருந்து 7பேர் மற்றும் 6 சிவிலியன்களிடமிருந்தும் இந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சாட்சியங்கள் கடந்த 22 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொன்சேகாவுக்கு எதிரான சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைக்காக இராணுவத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்கா நியமிக்கப்பட்டிருந்ததுடன் அவர் தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த சாட்சியங்களை நெறிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

ஐந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள்

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக திரட்டப்பட்டுள்ள சாட்சியங்களின் பிரகாரம் அவருக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் ஐந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் இராணுவ நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

அதற்கான நடவடிக்கைகளில் இராணுவ சட்டப் பிரிவைச் சேர்ந்த சட்ட ஆலோசகர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி குற்றப்பத்திரிகை இன்னும் ஓரிரு நாட்களில் தயாராகிவிடும். அதன் பின்னர் இராணுவ நீதிமன்ற விசாரணைகள் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர்பான அறிவிப்பு வழங்கப்படும்.

இராணுவ நீதிமன்ற நீதிபதிகள் குழு

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றசாட்டுக்களை விசாரிப்பதற்காக இராணுவ நீதிமன்றமொன்று நிறுவப்படும். அதில் சுமார் ஐந்து பேர் அடங்கிய நீதிபதிகள் குழுவொன்று காணப்படும். இவர்களில் இராணுவ மற்றும் விமானப் படை யைச் சேர்ந்த உயரதிகாரிகள் அடங்குவர். அல்லது இராணுவ தரப்பைச் சேர்ந்த உயரதிகாரிகள் மாத்திரம் உள்ளடங்குவர்.

இருப்பினும் அக்குழுவினை நியமிக்கும் அதிகாரம் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கே உண்டு. அதனால் குறித்த நீதிபதிகள் குழுவினை ஜனாதிபதியே நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இல்லாவிடின் அவரின் ஆலோசனையின் பிரகாரம் அக்குழுவினை இராணுவ தளபதி நியமிப்பார். அந்தவகையில் நீதிபதிகள் குழுவில் யார் அங்கம் வகிப்பார்கள் என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.

ஊடகவியலாளர் அனுமதி

ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையானது சிவில் நீதிமன்றத்தில் நடைபெறுவதைப் போன்றான பகிரங்கமான வழக்கு விசாரணையல்ல.

அதனால் அவருக்கு எதிரான விசாரணைகளை நேரடியாகப் பார்வையிட்டு செய்திகளை அறிக்கையிடும் வாய்ப்பு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இருப்பினும் ஊடகவியலாளர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்தால் அதற்கானதொரு சந்தர்ப்பத்தினை வழங்க வாய்ப்புண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக