சேலம்:உலகம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நித்யானந்தர் ஆஸ்ரம சொத்துக்கள், பினாமிகளின் பிடியில் சிக்கியுள்ளது. மக்களின் நன்கொடை பணம் சில புள்ளிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் முயற்சியை அறிந்த, போலீஸ், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை தீவிர விசாரணையை ரகசியமாக நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த ராஜசேகரன் சிறு வயதில் ஆன்மிகத்தில் பற்று ஏற்பட்டு துறவு பூண்டார். கன்னியாகுமரி முதல் இமயம் வரை பல புண்ணிய தலங்களுக்கு சென்று ஆன்மிக பயிற்சி எடுத்து கொண்ட ராஜசேகரன், பின்னாளில் நித்யானந்தா என பெயர் சூட்டி கொண்டார். உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆஸ்ரமம் நடத்தி வரும் நித்யானந்தாவின் சொத்து மதிப்பு 2,500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.தென் இந்தியாவில் ஆன்மிக சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தை நித்யானந்தா தன் பக்கம் ஈர்த்தார். இதன் விளைவாக கோடீஸ்வர தொழில் அதிபர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகளின் நம்பிக்கை பாத்திரமாக நித்யானந்தா மாறினார். பெங்களூருவில் 70 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமான ஆஸ்ரமத்தை நித்யானந்தா ஆரம்பித்து, பல மாவட்டங்களிலும் கிளைகளை ஆரம்பித்து சொத்துக்கு மேல் சொத்து குவித்து வந்துள்ளார்.ஆன்மிக பயிற்சியில் சேர விரும்புவர்களிடம் 2,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.
நித்யானந்தா கையை தூக்கி ஆசி வழங்க வேண்டும் என்றால் 5,000 ரூபாய் கட்டணம், தலையை தொட்டு ஆசி வழங்க 10 ஆயிரம் ரூபாய் கட்டணம், தொட்டு அரவணைத்து ஆசி வழங்க 25 ஆயிரம் ரூபாய் என வசூல் வேட்டை நடந்துள்ளது. எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 மாணவ, மாணவியர் பலர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 5,000 முதல் 10 ஆயிரம் வரை பணம் கட்டி ஆசி பெற்றுள்ளனர்.ஒவ்வொரு மாவட்டத்திலும் நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரிய சீடர்கள் மற்றும் பெரும் புள்ளிகள் கீழ் ஆஸ்ரமம் இயங்கி வந்தது. நடிகையுடனான சல்லாப பிரச்னை காரணமாக, தங்களது கழுத்துக்கு கத்தி வந்து விடும் என்ற அச்சத்தில் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த புள்ளிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
சொத்துக்களையும், பணத்தையும் ஆஸ்ரமத்துக்கு தானமாக கொடுத்த வி.ஐ.பி.,க்கள் நொந்து போயுள்ளனர். ஆஸ்ரமத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள், ஆஸ்ரமத்துக்கு வழங்கிய பல கோடி நன்கொடை சொத்துக்களை நித்யானந்தா முடக்கவில்லை.பிற்காலத்தில் பிரச்னையை சந்திக்க நேரிடும் வேளையில், ஆஸ்ரம சொத்துக்கள் அனைத்தும் போலீஸாரால் முடக்கப்பட்டால், பணத்துக்கு வெளியே கையேந்தும் நிலையை தவிர்க்க "பினாமி'களின் வசம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.ஆஸ்ரமத்துக்கு பொதுமக்கள் வழங்கிய நன்கொடைகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய புள்ளிகள் வசம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளன. "பினாமி'களின் பெயரிலும் ஆஸ்ரம சொத்துக்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
சேலம் குகை பகுதியை சேர்ந்த, "டெக்ஸ்டைல்ஸ்' தொழில் அதிபர், நித்யானந்தாவின் முக்கிய "பினாமி'களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரை போல பல தொழிலதிபர்கள், ஆஸ்ரமத்தின் சொத்துக்களை, பல ஊர்களில், "பினாமி'கள் அடைகாத்து வருகின்றனர். மக்கள் செல்வாக்கு பெற்ற நித்யானந்தா, மக்களின் பணத்தை ஆஸ்ரமம் நடத்த பயன்படுத்தாமல், சொகுசு வாழ்க்கைக்கு, பளிங்கு பங்களா கட்டி ஆடம்பர வாழ்க்கையில் திளைத்து வந்துள்ளார்.ஏழை, எளிய மக்கள் நித்யானந்தாவை நெருங்கிவிட முடியாத அளவுக்கு நெருப்பு வளையம் அமைத்து, பணத்தை கொட்டும் முக்கிய புள்ளிகள், வி.வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் தரிசனம் தரும் நிலையே இருந்து வந்தது.
நித்யானந்தாவை நம்பி ஆன்மிக வாழ்வை மேற்கொண்ட பல லட்சம் பக்தர்கள், நடிகை சல்லாப வீடியோ காட்சியால் நம்பிக்கை இழந்துள்ளனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் பெறப்பட்ட பல கோடி ரூபாய் பணம், "பினாமி'கள் பிடியில் உள்ளது. இந்த சொத்துக்களை கையகப்படுத்த, போலீஸாரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் ரகசிய விசாரணையை துவக்கி உள்ளனர்.நித்யானந்தா ஆஸ்ரமத்தில் இருந்து ஊழியர்கள், வி.ஐ.பி.,க்கள் வெளியேறியதால், அங்கு அன்றாடம் நடக்கும் தினசரி பூஜைகள் நடத்த ஆளில்லாமல் வெறிச்சோடியுள்ளது. நித்யானந்தா ஆஸ்ரமத்தில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 மணிக்கு நித்யதியானம், 9 மணிக்கு நித்ய பூஜை, நைவேத்ய பூஜை, மதியம் ஒரு மணிக்கு உச்சி கால நைவேத்யபூஜை, இரவு 7 மணிக்கு குரு மூர்த்திக்கு மஹாமங்கள ஆரத்தி, 8 மணிக்கு நைவேத்ய பூஜை, இரவு 9 மணிக்கு பள்ளியறை பூஜை என தினசரி நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.
பிரச்னையில் ஆஸ்ரமவாசிகள் சிக்கியதால் பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளது. வியாழன்தோறும், "குரு பூஜை' மஹா மங்கள ஆராத்தி செய்து அன்னதானம் வழங்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.ஆஸ்ரமத்துக்கு செல்லும் ஆன்மிகவாதிகளும், சீடர்களும் வேறு மடங்களை நாடி சென்று யோக, தியானம் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நித்யானந்தா மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ள நிலையில், கோடிக்கணக்கான ஆஸ்ரம சொத்துக்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது.
நித்யானந்தாவுக்கு எதிராக கூட்டு சதி?சேலம் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்த லெனின் ஏற்கனவே காந்தப்படுக்கை மோசடியில் சிக்கியவர். அவர் மீது சேலம், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்து, போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் லெனின், நித்யானந்தா ஆஸ்ரமத்தில் சாதாரண சீடராக சேர்ந்து, படிப்படியாக நம்பிக்கைக்குரிய சீடர்களின் ஒருவரானார். கடந்த 2006 முதல் ஆஸ்ரம பணிகளில் ஈடுபட்டு வந்த லெனின், நித்யானந்தாவின் அன்றாட வாழ்க்கை நடைமுறையை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார். நித்யானந்தா மக்களிடம் காட்டிய ஆன்மிக முகத்தையும், ஆஸ்ரமத்தின், "பெட்ரூமில்' அவரது "காம' முகத்தையும் லெனின் நன்கு அறிந்து வைத்துள்ளார்.
நடிகை ரஞ்சிதாவை காட்டிலும் பேரழகிகள் நித்யானந்தா ஆஸ்ரமத்தில் சீடர்களாய் வலம் வந்துள்ளன். அந்த அழகிய பெண்களும் நித்யானந்தாவுக்கு, "சேவை'கள் செய்து வந்துள்ளனர். ஆனால், பிரபலமான பெண்ணுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பதை வெளிகாட்டினால் மட்டுமே மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த முடியும் என்று கணக்கு போட்டுள்ளார் லெனின். ரஞ்சிதா என்ற "பொறி' மூலம் நித்யானந்தா காமலீலையை வீடியோ படம் எடுத்து, "எலி' போல் நித்யானந்தாவை சிக்க வைத்துள்ளார் லெனின். கொலை மிரட்டலுக்கு பாதுகாப்பு கேட்டுள்ள லெனின், தன்னை மிரட்டியவர்கள் பற்றி வாய் திறக்கவில்லை.இதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளது. திரைமறைவில் நித்யானந்தாவிடம் தொடர்ந்து நடந்து வரும் பல கோடி ரூபாய் பேரம், முடிவுக்கு வரும் போது நடிகையுடனான சல்லாப வீடியோ காட்சி "நாடகம்' முடிவுக்கு வரும், என்கின்றனர் நித்யானந்தாவின் விசுவாசிகள்.
மேலும் அவர்கள் கூறுகையில், "நித்யானந்தாவை சிக்கவைத்ததில், லெனின் கருவியாக்கப்பட்டள்ளார். அவருக்கு மூளையாக செயல்பட்டவர்கள் பலர் உள்ளனர். அவர்களது கட்டுப்பாட்டில் தான் லெனின் உள்ளார். அவர்கள் பாதுகாப்பில் லெனின் உள்ளதால், அவரை போலீஸார் கூட சுலபமாக நெருங்க முடியவில்லை என கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க நித்யானந்தாவுக்கு எதிராக நடந்த கூட்டு சதி. இந்த கூட்டு சதியில் உள்ளவர்கள் யார், யார் என்பதை விரைவில் வெளிச்சம் போட்டு காட்டுவோம். அப்போது நித்யானந்தாவின் நடவடிக்கைகள் மக்களுக்கு தெரியும்' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக