9 மார்ச், 2010

யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்தியா விருப்பம் ராஜபக்சேவிடம் நிருபமா ராவ் தெரிவித்தார்






யாழ்ப்பாணத்தில் புதிதாக துணைத் தூதரகம் அமைப்பதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் நிருபமா ராவ் தெரிவித்தார்.

ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் 3 நாள் இலங்கை பயணத்தை முடித்து விட்டு நேற்று டெல்லி திரும்பினார்.

அதிபர் ராஜபக்சேவுடன் நிருபமா நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலக செய்தி தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியதாவது:-

இந்திய தூதரகம்

இலங்கையில் தற்போது கொழும்பு நகரில் இந்திய தூதரகம் அமைந்துள்ளது. மேலும் கண்டியில் ஒரு துணைத் தூதரகமும் உள்ளது. வடக்கு பகுதியில் நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் துணைத்தூதரகம் அமைப்பதற்கு இந்தியா விரும்புவதாக அதிபர் ராஜபக்சேவிடம் நிருபமா கூறினார்.

மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் புனரமைப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா உறுதுணையாக இருக்கும். இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என்றும் நிருபமா ராவ் உறுதி அளித்தார்.

மேலும் 2008-ம் ஆண்டு மீன் பிடிப்பது தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புனரமைப்பு பணிகள்

மன்னார் பகுதியில் உள்ள புகழ்பெற்ற திருக்கேதேஸ்வரம் கோவிலை புதுப்பிக்கும் பணிகளில் இந்தியா ஈடுபடும் என்றும் தெரிவித்தார். அதற்கான பணிகளில் இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மகாபலிபுரம் சிற்ப கல்லூரியைச் சேர்ந்தவர்கள் விரைவில் அனுப்பப்படுவார்கள். மேலும், இலங்கையின் தலடா மலிகாவா என்ற இடத்தில் பன்னாட்டு புத்த மிïசியம் அமைப்பதற்கான முழு முயற்சிகளையும் இந்தியா எடுத்து வருவதாகவும் ராஜபக்சேவிடம் நிருபமா ராவ் கூறினார்.

அப்போது, புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் குறித்து ராஜபக்சே தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இலங்கை முகாம்களில் இன்னும் 70 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே இருப்பதாகவும் ஏராளமானோர் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாகவும் ராஜபக்சே கூறினார்.

இவ்வாறு விஷ்ணு பிரகாஷ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக