9 மார்ச், 2010

புதையல் பேர்வழிகளிடம் ஏமாறும் அப்பாவி கொழும்பு வாசிகள்!





ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்களுக்கு குறைவில்லை என்பார்கள். இதுவே இன்று ஏமாற்று வித்தைகள் நாடு முழுவதும் பல்கிப் பெருகக் காரணம் என்றால் கூட அது மிகையல்ல.

யார் யாரை ஏமாற்றுகின்றார்கள்?

இத்தனை நாளும் மலையகப் பகுதிகளில் உள்ளவர்கள்தான் அங்குள்ள ஏமாற்றுப் பேர்வழிகளால் ஏமாற்றுப்பட்டு வந்தார்கள். ஆனால் இன்றோ அந்நிலை தலைகீழாக மாறி, மலையக நபர்களிடம் கொழும்பு வாழ் அப்பாவிகள் ஏமாறுகின்றார்கள் என்றால் நம்ப முடிகின்றதா?

இது எப்படி?

மலையகத்தின் பலாங்கொடைப் பகுதிகளில் உள்ள குக் கிராமங்களிலிருந்து ஒரு கும்பல் கொழும்பிலுள்ள வர்த்தக நிறுவனங்களைச் சுற்றி வட்டமடிக்கின்றன... கையில் சிறு அளவு தங்கத் துண்டுகளை விற்க வந்ததாகக் காட்டி, அவற்றை விற்றுப் பணத்தையும் பெற்றுக் கொள்ளும் இந்தக் கும்பல், வார்த்தை ஜாலங்களால், நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்கின்றன.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதையலிலிருந்து எடுத்த தங்கக்கட்டிகள் இருப்பதாகவும் அவற்றைத் தாம் குறைந்த விலைக்கு வாங்கித் தரலாம் என்றும் இந்தக் கும்பல் கூறுகின்றது.

இவர்களின் கூற்றை அப்படியே நம்பிவிடும் கொழும்பிலுள்ள சில வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தமது இயலாத நிலைமை காரணமாக இத்தகைய வஞ்சகக் கூட்டத்தின் வலையில் சிக்கிக் கொள்கின்றார்கள். பிறகென்ன...? பண நஷ்டம்... ஏமாற்றம்... வாழ்க்கையில் விரக்திதான்.

கடந்தவாரம் இப்படியான ஒரு நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.

ஒரு வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்த இருவரிடம் 6 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து ஏமாற்றி விட்டார். பணத்தை இழந்து, பித்துப் பிடித்த நிலையில் இவர்கள் இருவரும் இன்று விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இவர்கள் மட்டுமல்ல, இது போன்ற ஏமாற்று வித்தைகளில் சிக்கிக் கொண்ட பலர், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து, இது பற்றி வெளியே சொல்லக் கூட முடியாமல் பரிதவித்து நிற்கின்றார்கள்.

இத்தகைய ஏமாற்று லீலைகள் எவ்வாறு அரங்கேறுகின்றன? இவற்றுக்குப் பின்னணியில் நிற்பவர்கள் யார்? நிச்சயமாக அவர்கள் 'பலம்' வாய்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.

இந்தப் 'புதையல்' சமாச்சாரங்கள் அநேகமாக பலாங்கொடைப் பகுதிகளில் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. அப்படியானால் சட்டவிரோதமாக எடுக்கப்படும் இத்தகைய புதையல்கள் தான் அப்பாவி மக்களை ஏமாற்றி ஏப்பம் விடுகின்றனவா?

இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்? புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களமா?

புலனாய்வுப் பிரிவினரின் கண்களுக்கு 'புதையல்' புலப்படாததன் மர்மம் தான் என்ன?

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா? செயற்படுவார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக