18 டிசம்பர், 2010

தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: துரித விசாரணைக்கு மூன்றாண்டுத் திட்டம்


*ஓய்வு பெற்ற நீதிபதிகளை பயன்படுத்தத் திட்டம்

*செயற்திட்டங்களுக்கு ரூ. 450மில். ஒதுக்கீடு

*நீதிபதிகளுக்கு இந்தியா, ஜப்பானில் பயிற்சி


விசாரிக்கப்படாமல் குவிந்துள்ள பெருமளவு வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக அடுத்த வருடம் முதல் 3 வருட திட்டமொன்று முன்னெடுக்கப்படும் இதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகளை பயன்படுத்தி வார இறுதி நாட்களில் வழக்குகளை விசாரணை செய்யவும் நீதிமன்றங்களின் தொகையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நீதிபதிகளின் வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடுபூராவும் உள்ள நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மேலும் கூறியதாவது, குவிந்துள்ள வழக்குகளை துரிதமாக தீர்ப்பது குறித்து பிரதம நீதியரசருடனும் நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். இதன்படி, வழக்குகளை துரிதப்படுத்த அடுத்த வருடம் முதல் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக் கப்படும். இதற்காக 450 மில்லியன் ரூபா வரவு செலவுத்திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளுக்கு வழங்கும் வசதிகளை அதிகரிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். நீதிபதிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க நாம் தயாராக உள்ளோம்.

வழக்குகள் தாமதமாவதற்கு யாரையும் குற்றங்கூற முடியாது. இதனை ஒன்றுபட்டே தீர்க்க வேண்டும்.

நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்கு நவீன வசதிகள் வழங்கப்படுகிறது.

கொழும்பில் நீதிபதிகள் தங்கிப் பயிற்சிப்பெற உச்சநீதிமன்ற வளாகத்தில் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த வருட முதற் பகுதியில் ஜனாதிபதி திறந்து வைப்பார். 60 நீதிமன்றங்களை புதிதாக உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு உதவ இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன. தற்பொழுது இந்தியாவில் நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கி வருகிறோம்.

நீதிபதிகளுக்கு 120 வாகனங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்தில் பல புதிய சட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.

வழக்குகளை துரிதமாக விசாரணை செய்யும் திட்டத்திற்கு நீதிபதிகள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுமார் 850 வழக்குகள் 10 வருட காலத்திற்கு மேலாக விசாரணை செய்யப்படாதுள்ளன.

நானும் ஜனாதிபதியும் சட்டத்தரணிகள் என்பதால் நீதித்துறையில் காணப்படும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்க முடியும் என்றும் கூறினார்.

பிரதம நீதியரசர் அசோக த சில்வா கூறியதாவது,

நீதிபதிகளுக்கு போபாலில் பயிற்சி வழங்கி வருகிறோம். இன்று (17) 20 நீதிபதிகள் பயிற்சிக்காக செல்கின்றனர். தொடர்ந்து இந்த பயிற்சி வழங்கும் திட்டம்முன்னெடுக்கப்படும். நீதிபதிகளுக்கு பல்வேறு மட்டங்களிலும் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். 4 முதல் 5 வருட பயிற்சியின் பின்னரே நீதிபதியாக ஒருவர் தெரிவாவார். ஏனென்றால் நீதிபதிகளுக்கு அனுபவம் முக்கியமாகும்.

முன்னர் 6 வருட அனுபவத்தின் பின்னரே நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டார். தற்பொழுது அது 3 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. திரும்பவும் 6 வருட அனுபவத்தின் பின் நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பக்க சார்பாக அன்றி பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் வகையிலே தீர்ப்பு வழங்க வேண்டும். தண்டனை வழங்கும் போதும் உச்ச தண்டனையை விட அதிகமாக வழங்கக் கூடாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக