18 டிசம்பர், 2010

தமிழர் தாயகத்தை அபகரிக்கச் சதி : எல்லாவல தேரரின் கருத்துக்குத் தமிழ்க் கட்சிகள் கண்டனம்



தமிழ் மக்களுக்கு இந்த நாடு உரிமையானது என்பதை நிரூபிப்பதற்கு தேவையான சான்றாதாரங்கள் இருக்கின்றன. எனவே, வந்தேறு குடிகளான சிங்கள இனத்தைச் சார்ந்தவர்களில் இனவாத நோக்கம் கொண்ட சிலர் தமிழர் பற்றியோ அல்லது தமிழர் தாயகம் பற்றியோ பேசுவதற்கு அருகதையற்றவர்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ்க் கட்சிகள், எல்லாவல மேதானந்த தேரரினால் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அளிக்கப்பட்ட சாட்சியத்துக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட இனவாதக் கட்சிகளின் தற்கால நிலைப்பாடுகள் இந்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கானதல்ல. மாறாக தமிழர்களை இல்லாதொழிக்கின்ற தீய எண்ணங்களையே கொண்டிருக்கின்றன.

இவ்வாறாக செயற்பட்டு தமிழ் மக்களை மீண்டும் ஒரு போராட்டத்துக்குள் தள்ளி விட வேண்டாம் என்று திடமாகக் கூறி வைக்க விரும்புவதாகவும் அக்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவல மேதானந்த தேரர் எம்.பி வியாழக்கிழமை நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போது வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்லவென்றும் அவ்வாறு கூறுவதற்கு எந்த உரிமையும் தமிழ் மக்களுக்கு கிடையாது என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்த சாட்சியம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு மற்றும் புளொட் ஆகிய தமிழ்க் கட்சிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.

த. தே. வி. கூ.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் எம்.பியுமான எம். கே. சிவாஜிலிங்கம் இது தொடர்பில் கூறுகையில்,

"சிங்களவர்களின் மகாவம்சம் கூறுகின்ற வரலாறுகளின் அடிப்படையில் தேசத்துரோக குற்றத்துக்காக இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட விஜயன் தனது 700 தோழர்களுடன் இலங்கை வந்தான். அவ்வாறு வந்தவரே இங்கு சிங்களத்தைப் பரப்பினார். இத்தகையவர்களின் வருகைக்கு முன்னரே இங்கு தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் தமிழ் மன்னர்களின் ராஜ்ஜியங்களுக்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

வடக்கு கிழக்கு தமிழருக்கு சொந்தமானது அல்ல என்று கூறுவதற்கு சிங்களவர்களுக்கு உரிமை கிடையாது. ஏனெனில் தமிழர் உரிமை கோருவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே அநாவசியமாக பேசி மக்களிடத்தில் குழப்பங்களைத் தோற்றுவித்து இனவாதத்தை பரப்பி வருவதானது தமிழ் மக்களை மீண்டும் ஒரு போராட்டத்துக்குள் தள்ளி விடுவதற்கான சதியாகும். இதனைச் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

த. தே. கூ.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிச் செயலாளரும் வன்னி மாவட்ட எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில்,

"வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீகம். அது தமிழர்களுக்கே உரிய சொத்தாகும். இனவாதத்தைப் பரப்பி நாட்டிலும் மக்களிடத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை அபகரித்து விடுவதற்கே திரைமறைவிலான சதிகள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகின்றன.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிங்கள மக்களைத் திசை திருப்புவதற்காக இனவாதம் கக்கப்பட்டது. அது தற்போது மீண்டும் முளைவிட்டு வருவதானது தமிழின அழிப்புக்கு ஒப்பானதாகவே தெரிகின்றது.

வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீக பூமி என்பதற்கு பன்மடங்கு ஆதாரங்கள் இருக்கின்றன. உண்மை வரலாறுகளை அறியாத இவர்கள் தாமாகவே வரலாறுகளை எழுதுவதற்கும் அதனை மெய்ப்பிப்பதற்கும் தந்திரோபாய முறைகளைக் கையாண்டு வருகின்றனர். இது நல்லதொரு எதிர்காலத்துக்கான அறிகுறியாகவும் தெரியவில்லை" என்றார்.

புளொட்

இது குறித்து புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன் கூறுகையில்,

"விஹாரைகள் அமைக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகளை வைத்துக் கொண்டு வடக்கு பிரதேசம் சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று தீர்மானிக்க முடியாது. அப்படிப் பார்க்கையில் இந்தியா முழுதும் விஹாரைகள் இருக்கின்றன.

புத்தர் என்கின்ற சித்தார்த்தன் யார் என்பதை இன்றைய சிங்களவர்கள் தேடியறிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். அநாவசியமான கருத்துக்கள் மக்களிடையே அசௌகரியங்களை உண்டு பண்ணுகின்றன.

எல்லாவல மோதானந்த தேரர் போன்றோரது இவ்வாறான கருத்துக்கள் நல்லிணக்கத்துக்கு தடையாகவே அமைகின்றன" என்றார்.

ஜ. ம. மு.

இது குறித்து அறிக்கை விடுத்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான மனோ கணேசன் கூறுகையில்,

கம்பராமாயணம் மகாவம்சத்தை தழுவி எழுதப்பட்டது என்றும் திருவள்ளுவர் சிங்கள பௌத்தர் என்றும் கௌதம புத்தர் அம்பாந்தோட்டையில் பிறந்தார் என்றும் தமிழர்களுக்கு வேஷ்டியும், சேலையும் கட்டுவதற்கு கற்றுக் கொடுத்ததே தனது மூதாதையர் என்றும் மேதானந்த எல்லாவல தேரர் நாளை கருத்து தெரிவித்தாலும் கூட நாம் ஆச்சரியப்படப் போவதில்லை.

ஏனென்றால் இவரை எமக்கு மிக நன்றாகத் தெரியும். தன்னைத்தானே 'வரலாற்று சக்கரவத்தி' என அழைத்துக் கொள்ளும் இந்தத் தேரருக்கு இன்றைய இனவாத யதார்த்தத்திற்கு ஏற்ற வகையில் வரலாற்றைத் திரிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது. எனவே இவரது கட்டுக் கதைகளுக்கும் மோசடி கருத்துக்களுக்கும் பதில் கூறி எமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக