முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர். ஜெயவர்த்தனவும், சந்திரிகா குமாரதுங்கவும் தமது இரண்டாவது பதவிக் காலத்தில் ஜனநாயகத்திற்கு சவாலான வகையில் தன்னிச்சையாக செயற்பட்டனர். மூன்றாவது தடவையாக பதவிக் காலத்தை நீடிக்கவும் முயற்சி செய்து தோல்வி அடைந்ததாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்டு 32 வருடங்கள் நிறைவடைகின்றன. இதில் ஜே. ஆர். ஜெயவர்த்தனவும் சந்திரிகா குமாரதுங்கவும் மட்டுமே 2 தடவைகளும் முழுமையாக பதவியில் இருந்தனர். முதலாவது பதவிக் காலத் துடன் ஒப்பிடுகையில் தமது இரண்டாவது பதவிக் காலத்தில் அவர்கள் ஜனநாயகத்திற்கு சவாலான முடிவுகளை எடுத்தனர்.
தனது வயது, அரசியல் நோக்கம் கட்சி என்பவற்றுக்கு ஏற்றவாறே ஜே. ஆர். 2 தடவைகளாக ஜனாதிபதி பதவிக் காலத்தை மட்டுப்படுத்தினார். இரண்டாவது பதவிக் காலம் முடிவடைகையில் ஜே. ஆருக்கு 84 வயதாக இருந்தது. ஆனாலும் அவர் 3 ஆவது தடவையாகவும் பதவிக் காலத்தை நீடிக்க முயன்றார்.
இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வாகவே 2 தடவை என மட்டுப்படுத்தப்பட்டுள்ள பதவிக் கால எல்லையை நீக்கியுள்ளோம்.
மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப அதிகாரத்தை தக்க வைக்கவோ அவரின் மகனுக்கு அவகாசம் வழங்கவோ இந்தத் திருத்தம் செய்யப்படவில்லை. இதனூடாக சர்வாதிகார ஆட்சியே உருவாகும் என்ற எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உருவாக்க கை உயர்த்திய ரணில் தலைமையிலான ஐ. தே. கவுக்கு யாப்புத் திருத்தம் குறித்துப் பேச அருகதை கிடையாது என்றார்.
பிரதி அமைச்சர் சரத் அமுனுகம கூறியதாவது :-
உலகில் சிறந்த எதிர்காலமுள்ள நாடாக இலங்கை காணப்படுகிறது. ஆசியாவில் சிறந்த பாதுகாப்புள்ள நாடாக இலங்கை இருப்பது அபிவிருத்திக்கு முக்கிய அடித்தளமாகும். 7 வீதமாக உள்ள பொருளாதார அபிவிருத்தி 8 வீதமாக உயரும் போது இவ்வாறு முன்னேற்றம் ஏற்படும். நாட்டின் அபிவிருத்திக்கு இந்த யாப்புத் திருத்தம் முக்கியமாகும். மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. அவரை மூன்றாவது தடவையும் தெரிவு செய்வதா என்பதை மக்களே முடிவு செய்வர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக