8 செப்டம்பர், 2010

அதிபர் பதவிக்கு 2 முறைதான் போட்டி என்ற வரம்பை நீக்கும் மசோதா: இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறுகிறது






அதிபர் பதவியை ஒருவர் இரண்டு முறைதான் வகிக்க முடியும் என்று உள்ள வரம்பை நீக்க வகை செய்யும் மசோதா புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறும் எனத் தெரிகிறது. இந்நிலையில் இது தொடர்பான சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஆனால் 18-வது திருத்தத்தின்கீழ் உருவாகும் அரசமைப்புச் சட்டம் அதிபரின் அதிகாரத்தை வெகுவாகக் குறைத்துவிடும் என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தெரிவித்தார். இந்த மசோதா மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் இந்த மசோதா நிறைவேறிவிடும். சில எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்த மசோதாவை அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே இந்த மசோதாவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மசோதாவைக் கொண்டு வர பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை என்றும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் நிறைவேற்றலாம் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான விவாதம் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்று நிறைவேற்றப்பட உள்ளது.

இது தொடர்பாக தனது வீட்டில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அதிபர் ராஜபட்ச மேலும் கூறியது:

இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டுவதாகக் கூறப்படுவது தவறானது.

18-வது திருத்தத்தின்கீழ் உருவாகும் அரசமைப்புச் சட்ட கவுன்சில், நாடாளுமன்றத்தின் மேலதிகாரத்தை உறுதி செய்வதாக அமையும். இந்தக் கவுன்சிலில் இடம்பெறும் உறுப்பினர்கள் அனைவரும் எம்.பி.க்கள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் அதிபர் தரப்பு பிரதிநிதிகள் இடம்பெறமாட்டார்கள். 17-வது திருத்தத்தின் கீழான அரசமைப்புக் கவுன்சில் குழுவில் அதிபரின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். புதிதாக ஏற்படுத்தப்படும் குழுவில் 5 பேர் இடம்பெற்றிருப்பர். பிரதமர், நாடாளுமன்றத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் 2 எம்.பி.க்கள் இக்கவுன்சிலில் இருப்பர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் இந்தக் குழுவுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தக் குழுவின் செயல்பாடு முழுக்க முழுக்க எதிர்க்கட்சி வசம் சென்றுவிடும் என்று அதிபர் தெரிவித்ததாக வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. குறிப்பாக பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகளும் இதில் சேர்க்கப்பட்டதாக ராஜபட்ச தெரிவித்தார்.

17-வது அரசியல் சாசன திருத்தத்தின் கீழான கவுன்சில் உறுப்பினர்கள் நிர்வாக ரீதியில் முட்டுக்கட்டை போடுவதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறியதாக ராஜபட்ச தெரிவித்தார்.

அடுத்து அதிபராக வரவிருப்பவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இலங்கை சுதந்திர கட்சிக்கு உண்டு. இருப்பினும் நாட்டின் அதிபராக யார் வர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்கள் மக்களே. இப்போது கொண்டு வரப்படும் மசோதா மக்களின் இறையாண்மையை மேம்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

அடுத்த அதிபராக மூத்த மகன் நமல் ராஜபட்ச வருவாரா? என்று கேட்டதற்கு, அதிபர் பதவிக்கு வருவதற்கு குறுக்கு வழி ஏதும் கிடையாது. 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தான் அதிபர் பதவியை அடைந்ததாக அவர் குறிப்பிட்டார். 23 வயதில் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நுழைந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதிபர் பதவி என்பது 50 மீட்டர் அல்லது 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்றதல்ல. இது மாரத்தான் போன்ற நெடுந்தொலைவு ஓட்டம் என்றார். அரசியலுக்கு வர விரும்பும் அனைவருக்கும் இதுதான் தனது ஆலோசனை என்று குறிப்பிட்ட அவர் இதில் குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்கள் தோல்வியைத்தான் அடைவர் என்று குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலில் இரண்டு முறைக்கு மேல் போட்டியிட முடியாது என்றாலே இப்பதவிக்கு வரும் எவரும் இரண்டாவது முறை பதவிக் காலத்தில் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போய்விடுவார். இதற்குக் காரணமே அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதுதான். இதனாலேயே அவர்கள் முழு ஈடுபாட்டுடன் சேவையாற்றமாட்டார்கள். மீண்டும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்றால்தான் மக்கள் நலத் திட்டங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் அவர்கள் செயல்படுத்துவர். புதிய மசோதா மக்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்று குறிப்பிட்டார் ராஜபட்ச.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக