17 ஜூலை, 2010

தமிழ் பணிப்பெண் கொழும்பில் கொலை: கண்காணிப்பில் பி-கணேசன்

பதுளை மாவட்டம், எல்ல, நமுனுகலை, கலுகல தோட்டம், கீழ்பிரிவை சார்ந்த வெள்ளசாமி சீதாராணி என்ற 44 வயதுடைய பெண் கொழும்பு புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீடொன்றில் பணிப்பெண்னாக பணிபுரியும் வேளையில் அடித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலே கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரும், அவரது மாமியாரும் கைதுசெய்யப்பட்டு, புதுகடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளை ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனும், மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதனும் கண்காணித்துவருகின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதுச்செட்டித்தெரு தொடர்மாடி வீட்டில் கடந்த ஆறுமாத காலமாக இப்பெண் பணிபுரிந்த வேளையிலே இக்கொடூரச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் ஒரு திருட்டுச்சம்பவம் தொடர்பிலே எஜமானர்களால் இந்த பெண் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட இரத்த பெருக்கினால் மரணம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் சந்தேக நபர்களான ஷாகுல் ஹமீத் என்ற வீட்டு உரிமையாளரையும், அவரது மாமியாரான நோனா நஜீமா என்பவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேல் விசாரணைகள் தொடர்பிலே கொட்டாஞ்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி, கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா ககேணசன் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதன் ஆகியோர் விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நேரடியாக கண்காணித்து வருகின்றார்கள். கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்சமயம் கொழும்பு மயானச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக