26 ஏப்ரல், 2010

நளினியிடம் மொபைல் : கண்காணிக்கத் தவறியதாக அறுவர் மீதுநடவடிக்கை



வேலூர் பெண்கள் சிறையில் நளினியிடம் மொபைல் போன் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், அவரைக் கண்காணிக்காது விட்ட ஆறு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியிடம், மொபைல் போன், இரண்டு சிம் கார்டுகள் இருந்தமை குறித்து கடந்த 21ஆம் திகதி முதல் விசாரணை நடந்து வருகிறது.

வேலூர் பெண்கள் சிறை அதிகாரிகள், பாகாயம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி உள்ளிட்ட பொலிசார் முதல் சிறைத்துறை அதிகாரிகள், மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் 'கியூ' பிரிவினர் வரை விசாரணை நடத்தியும் இதுவரை உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாகப் பொலிசார் ஒன்பது பேரை விசாரித்தனர். கடைசியாக விசாரிக்கப்பட்ட ரவி, பத்மா மூலம் அதிகாரிகளுக்கு சிறிய தகவல் கிடைத்தது. இவர்கள் தினமும் காட்பாடி பொலிஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

பெண்கள் சிறையில் நளினியை சரியாக கண்காணிக்காமல் விட்டதால், மொபைல் போன் உள்ளிட்ட சகல வசதிகளும் அவரை தேடிச் சென்றுள்ளதாக கியூ பிரிவு பொலிசார் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, வேலூர் பெண்கள் சிறையில் கடமையாற்றும் நான்கு சிறை அதிகாரிகள், ஆறு சிறைக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் நளினியிடம் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 17 சிறைக் காவலர்கள், ஆறு சிறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். அதில் பாதி பேர் ஓய்வு பெற்றுள்ளனர். சிலர் மாறுதலாகி வேறு சிறைகளுக்குச் சென்று விட்டனர். அனைவரிடமும் விசாரணை நடத்த சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நளினியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போகும் நாளை பொலிசார் ரகசியமாக வைத்திருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக