இலங்கையின் நெருங்கிய கூட்டாளி நாடு இந்தியா என்றார் இலங்கை புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ்.
இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் கொழும்பில் முதல்தடவையாக செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த போது பெரிஸ் இதைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: பூடான் தலைநகர் திம்புவில் தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் 16-வது உச்சி மாநாடு வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் இறுதியில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிற இந்திய தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணி, ஈழத்தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணி ஆகியவை குறித்து இந்திய தலைவர்களிடம் விளக்கப்படும்.
இலங்கையின் நலன் கருதி இந்திய தலைவர்கள் கூறும் கருத்துக்கு மதிப்பளித்து கேட்கப்படும். இலங்கை எதிர்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்தும் இந்திய தலைவர்களிடம் கூறப்படும்.
நான் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இந்திய தலைவர்களை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் நான் கடந்த சில ஆண்டுகளாகவே நெருங்கிய தொடர்பு வைத்துள்ளேன் என்றார் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக