14 மார்ச், 2010

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) இயக்கத் தலைவர் த. சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பேட்டி நேர்காணல்: ஏ.எச்.சித்தீக் காரியப்பர்






கேள்வி: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட வேண்டுமென்ற நோக்கில் நீங்கள் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தீர்கள். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது என்பதனை நீங்கள் எற்றுக் கொள்வீர்கள். உங்களது முயற்சி தோல்வியடையக் காரணமென்ன?



பதில்: யுத்தம் முடிவடைந்த நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் முடிந்தனவற்றைச் செய்ய வேண:;டும் என்ற நோக்கில் அனைத்துத் தமிழக்; கட்சிகளையும் ஒரு கூட்டமைப்பாக அல்லாவிடினும் ஓர் அணியாக ஒன்றுபடுத்தும் முயற்சியில்தான் எமது கட்சி இறங்கியது. இவ்வாறானதொரு முயற்சியை எமது கட்சி மட்டுமல்ல ஏனைய சில தமிழ்க் கட்சிகளும் மேற்கொண்டுதான் இருந்தன. இந்த முன்னெடுப்பு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே யாழ்., வவுனியா உள்ளுராட்சித் தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல் ஆகியன இடம்பெற்றன. இதன் காரணமாக எமது முன்னெடுப்பில் தொய்வு நிலையேற்பட்டது.



கேள்வி: நீங்கள் குறிப்பிடும் தேர்தல்கள் நடைபெற்ற பின்னரும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் தொடர்ந்தும் நீங்கள் ஏனைய கட்சிகளுடன் பேசினீர்கள். இந்தப் பேச்சுவார்த்தையானது தமிழ் மக்கள் நலன் கருதியா மேற்கொள்ளப்பட்டது.?



பதில்: இல்லை..



கேள்வி: அவ்வாறெனின்…



பதில்: தேர்தல் கூட்டுச் சம்பந்தமாகவே பல கட்சிகளாலும் முயற்சி எடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவோ அல்லது அந்தத் தீர்வுக்கான திட்டங்கள் தொடர்பிலோ நாங்கள் பேசவில்லை. இது ஒரு தேர்தல் கூட்டுக்கான பேச்சுவார்த்தையாக மட்டுமே அமைந்திருந்தது. இவ்வாறான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துக் கொண்டிருந்தபோது பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. வேட்பாளர் தெரிவு, வேட்பாளர்களை நியமித்தல், மாவட்டங்களை விட்டுக் கொடுத்தல் போன்ற பல பிரச்சினைகள் எமது பேச்சுவார்த்தையின் போது எழுந்தன. இதன் காரணமாக இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. எது எப்படியிருப்பினும் யுத்தம் முடிந்து நடைபெறும் இத்தேர்தலானது ஜனநாயகத்தை மிளிர வைப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் தேர்தலாகவே நான் பார்க்கிறேன். அது மட்டுமல்ல.. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கற்பனையிலும் இருப்பதனைப் பார்க்கிலும் மக்கள் யாரைச் சரியாகத் தெரிவு செய்து கொள்ளப் போகிறார்களென்பதனை இந்தத் தேர்தலில் நாம் அறிந்து கொள்ள கூடியதாகவிருக்கும். சில தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். ஆனாலும் இந்தத் தேர்தலை ஜனநாயக ரீதியாக இடம்பெறப்போகும் தேர்தலாகவே நான் கருதுகிறேன். அதுவே எமது கட்சியின் எதிர்பர்ப்புமாகும். அவ்வாறு இந்தத் தேர்தல் இடம்பெற்று தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட்டால் அதன் ஊடாகக் கூட நாம் பலவற்றைச் சாதித்துக் கொள்ள முடியும்.



ஆகக் குறைந்தது தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவேனும் நாம் ஐக்கியப்பட வேண்டும். அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவை நாம் சந்தித்த போது அவர் ஒரு கருத்தினை எம்மிடம் வலியுறுத்தியிருந்;தார். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக ஒவ்வொரு கட்சிகளும் வௌ;வேறான தீர்வுத் திட்டத்தை சமர்ப்பித்தால் அவற்றினை எப்படி எங்களால் இலங்கை அரசிடம் அமுல்படுத்துமாறு கோரமுடியும்? நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னராவது நீங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஒரு நியாயமான, பொதுவான தீர்வை நீங்கள் முன்வைத்தால் அதனை அமுல்படுத்துவதற்கு நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாமெனத் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டால் மட்டுமே அதனைச் சாத்தியமாக்கலாமென்பதனையே அவரது வேண்டுகோள் எமக்குத் தெரிவித்திருந்தது. இரனைக் கருத்தில் கொண்டு நாம் தேர்தலின் பின்னரும் முயற்சிகளை எடுக்கவுள்ளோம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலாவது நாம் ஐக்கியப்படவேண்டும்.



கேள்வி: வெளியிலிருந்து வரும் அழுத்தங்களுக்கோ ஆலோசனைகளுக்கோ நாம் இடமளிக்கப் போவதில்லையென்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் இந்தியா எப்படி அழுத்தம் கொடுத்தும் பயன் கிடைக்கப் போவதில்லையே?



பதில்: தேர்தல் காலங்களில் சில பேரினவாத சிங்கள அரசியல் கட்சிகள் கூறும் விடயங்களை விசேடமாகத் தமது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக் கொள்ளவதற்காகச் சொல்லப்படும் கதைகளை நாம் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வர்.



கேள்வி: கட்சிள் மாத்திரமல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இவ்வாறு தெரிவித்திருந்தாரே?



பதில்: இந்தியாவினது அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர் செயற்பட மறுக்கலாம். ஆனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது மக்களுக்கான தீர்வு தொடர்பில் அழுத்தம் கொடுத்தால் ஜனாதிபதியால் எப்படி மறுக்க முடியும்?



கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் முதலாவது நகர்வாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வையா நீங்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்துவீர்கள்? ஏனெனில் இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது கையை நீட்டியதும் கிடைக்கப் போவதில்லையே.. தமிழ்மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்க முன்னுரிமை வழங்கி அவற்றினைத் தீர்த்து வைக்கும் நகர்வை முதலில் மேற்கொள்ளலாமல்லவா?



பதில்: ஆமாம்.. இதுவே இன்றைய முதல் தேவை.. இதிலும் நாம் ஐக்கியப்பட்டேயாக வேண்டும். அபிவிருத்தி வேலைகள், அகதிகளாகவுள்ள மக்களை மீள்குடியேற்றுதல், அவ்வாறு குறியேற்றப்பட்ட மக்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் தாங்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கக் கூடியதான வாழ்க்கை வசதி, புலிகள் இயக்கத்தில் சேர்ந்த அல்லது பலாத்காரமாகச் சேர்க்கபட்ட சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை விடுவித்தல், போன்றனவற்றினை அடிப்படையாகக் கொண்டே எமது முதல் முழு நகர்வினையும் எடுக்க வேண்டும். இதன் பின்னரே இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான நகர்வை முன்னெடுக்க வேண்டும்.. ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இரண்டாம் பட்சமானதல்ல என்பதனையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.



கேள்வி: எவ்வளவோ அவலங்களையும் அழிவுகளையும் முகங்கொண்ட தமிழ் மக்களுக்கு அவர்களின் பிரச்சினைக்கான தீர்வானது 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு உட்பட்டதாகத்தானே இருக்கப் போகிறது?



பதில்: 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாகத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்று நாம் ஒருபோதும் கூறவில்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோதே இதனைத் தெரிவித்திருந்தோம். ஆனால் எமது மக்களின் பிரச்சினைக்கான தீர்வு எங்கோ ஒரு மூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதில் நாம் தீவிரமாக இருந்தோம். இதனடிப்படையில் 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஓர் ஆரம்பமாகப் பார்க்கிறோம் அத்துடன் இந்த விடயம் இந்தியாவின் நேரடிக் கண்காணிப்பிலுள்ளது அத்துடன் பதின்மூன்றாவது அரசியலமைப்பில் மேலும் மாற்றங்கள் செய்யபட்டு முழுமையான அதிகாரங்கள் கிடைக்க வேண்டும். அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசுக்கு வேண்டும்.



கேள்வி;: இப்போது இருக்கும் அதிகாரங்களே சரியாக வழங்கப்படாத நிலையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசுக்குக் கிடைத்தால் 13 ஆவது அரசியலமைப்பில் மேலும் திருத்தங்களை அரசாங்கம் செய்யுமென்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?



பதில்: நிச்சயமாக இல்லை..அப்படி இந்த அரசுக்கு மூன்றிலிருந்து அதிகப் பெரும்பான்மை கிடைத்தால் கூட அதிகாரப் பரவலாக்கலைத் தருவார்களென்று நான் நம்பவில்லை. அவர்கள் அதிகாரப் பரவலாக்கத்துக்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கேட்கவில்லை. இன்றையத் தேர்தல் முறையை மாற்றுவதற்காகத்தான் அதனைக் கேட்கிறார்கள். இன்றையத் தேர்தல்முறையின் கீழ் தாம் சிறுபான்மைக் கட்சியின் ஆதரவிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளதால் அதிலிருந்து மீட்சிபெற்றுக் கொள்வதற்காவே இந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை கோரப்படுகிறது.



கேள்வி: உங்கள் கட்சி எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு எத்தகைய தன்மைகொண்டதாகவிருக்க வேண்டும்?



பதில்: எங்களது பகுதிகளில் தாங்களே தங்களது விடயங்களைப் பார்க்கக் கூடியளவுக்கான அதிகாரப் பரவலாக்கம் ஒன்று தேவை. இது அனைத்து விடயங்களுக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். பொலிஸ், காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும்.



கேள்வி: கிழக்கு மாகாண சபையின் இன்றைய நிலையைப் பாருங்கள்.. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இங்கும் அதே நிலைதானே உருவாகும்?



பதில்: தமிழ்மக்களுக்கு மாகாண சபை ஊ+டான அனைத்து அதிகாரங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும். இந்த விடயத்தில் நேர்மையாக அரசு செயற்படவேண்டும். ஆளுநரை வைத்துக் கொண்டு கொடுக்கப்பட்ட அதிகாரங்களைக் கூடக் கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருந்தால் அவர்கள் மிகப் பெரிய தவறைச் செய்து கொண்டிருக்கிறார்களென்றுதான் கூறமுடியும். தமிழ் மக்கள் இன்று களைப்படைந்த நிலையில் இருக்கின்றார்களென்பதே உண்மை.மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்துக்கு அவர்கள் போகமாட்டர்களென்பதும் உண்மை. ஆனால் அந்த மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் மறுக்கபட்டு, தமிழ் பகுதிகளின் அபிவிருத்திகளும் முடக்கப்பட்டு தமது பிரதிநிதிகள் கூட அதிகாரமற்ற பொம்மைகளாக இருப்பதனை தமிழ் மக்கள் நீண்ட காலத்துக்குச் சகித்தக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆகவே அரசாங்கம் இந்த விடயத்தைப் புரிந்து கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும்.



கேள்வி: இன்று வடக்கு,கிழக்கில் சில வேண்டத்தகாத சம்பவங்களும் இடம் பெறுகின்றவே. உதாரணமாக தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிப்பு,சிங்கள குடியேற்றங்கள்; இவை தொடர்பில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?



பதில்: வன்னியில் இவ்வாறான அரசினால் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். இதேவேளை, கிழக்கில் இவை இடம்பெறுகின்றன. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்துக்கான காரணிகளாக இவைகளும் அமைந்திருந்ததை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறான விரும்பத்தகாத செற்பாடுகளை மேற்கொண்டு இந்த நாட்டில் ஓர் அமைதியற்ற நிலை தொடர்வதனை அரசாங்கம் விரும்புகிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. எங்களுக்கு நிச்சயமாக அரசியல் அதிகாரம் கிடைத்தவுடன் இவற்றுக்கு எதிராகவெல்லாம் குரல் கொடுக்வுள்ளோம்.



கேள்வி: வடக்கு,கிழக்கில் அதிக அளவில் சுயேச்சைக் குழுக்களை நிறுத்தி வாக்குகளைச் சிதறடிக்கச் செய்து தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுச் செயற்படுவதாகக் கூறப்படுகிறதே?



பதில்: இந்த விடயத்தில் உண்மையிருப்பதாகவே நினைக்கிறேன். சிலர் பலவந்தப்படுத்தப்பட்டும் அரசாங்க அதிகாரங்கள் பாவிக்கப்பட்டும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால,; இவையெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட விடயங்களே. அரசியல் அதிகார தரப்பினர் இவ்வாறு நடந்து கொள்வதென்பதும் எதிர்பாhக்கப்பட்ட விடயமே ஆனால் மக்கள் இவ்வாறானவர்களை இனம்கண்டு புறந்தள்ளுவார்களானால் எந்தப் பிரச்சினையும் இல்லைதானே? இதன் மூலம் அரசாங்கமும் அரசின் ஏஜென்டுகளாகவும் அரசின் அற்பசொற்ப சலுகைகளுக்குமாக நிற்பவர்களும் நிச்சயம் பாடம் கற்றுக் கொள்வர்.



கேள்வி: உங்களது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அரசுடன் இணைந்து செயற்படும் எண்ணம் உள்ளதா?



பதில்: எங்களைப் பொறுத்த வரையில் அரசுடன் இணைந்து முழுமையாகச் செயற்பட வேண்டிய தேவையில்லை.வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும். அபிவிருத்தி நடவடிக்கைகளும் துரிதமாக இடம்பெற வேண்டும் அவர்களுக்கான வீட்டு வசதிகள், தொழில் வசதிகள் சரியாக வழங்கப்படவேண்டும். இப்படி அங்கு பல வேலைகள் அதாவது மிகப் பெரிய வேலைகள் எம்முன் காத்திருக்கின்றன. அவற்றினை நாம் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே எமது தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் அரசுடன் புரிந்துணர்வுடன் நாம் செயற்படுவோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வையே ஆதரித்தோம். ஆகவே, நாங்கள் அவரிடம் உரிமையோடு எதனையும் கேட்க முடியும். அவர் எமது கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவாரென்று எதிர்பார்க்கிறோம். அமைச்சுப் பதவியைப் பெற்றுத்தான் சேவை செய்ய வேண்டுமென்ற தேவை எமக்கு இல்லையே?



அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி 113 க்கு மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும். இந்த நிலையில் ஏனைய கட்சிகளின் ஆதரவு அரசுக்குத் தேவைப்படாதும் போகலாமல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக