14 மார்ச், 2010

முல்லைத்தீவில் குடியேற்றப்பட்டவர்களுக்கு உதவ 15 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசு அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கும் வகையில் சுமார் பதினைந்து அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளில் சுமார் நூறு கோடி ரூபா செலவில் 2700 வீடுகளை அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அரச சார்பற்ற சுமார் 15 நிறுவனங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கியிருந்து குறிப்பிட்ட பணிகளைச் செய்ய முடியும். இதற்கான அனுமதியை வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி செயலணியினால் அனுமதிக்கப்பட்ட இந்த அரச சார்பற்ற நிறுவனங்களில் பல ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வந்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள் வந்து சேரும். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான குடியிருப்புகள், குடிநீர் வசதிகள், அந்த மக்களின் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்கு இந்த நிறுவனங்கள் உதவிகளை வழங்கவுள்ளன.

6787 குடும்பங்கள் மீளக் குடியமர்வு

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 6787 குடும்பங்களைச் சேர்ந்த 20,245 பேர், அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். வற்றாப்பளை நகர பிரிவின் முதலாவது கிராமத்தில் இறுதியாக கடந்த வியாழக்கிழமை 284 குடும்பங்களைச் சேர்ந்த 846 பேர் மீளக் குடியேற்றப்பட்டுள்ளனர். இந்தப் பிரதேசத்துக்கான பிரதேச செயலகமும் கடந்த வியாழக்கிழமை முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் முன்னைய புள்ளி விபரங்களின்படி 28,500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,20,000 பேர் வசித்து வந்தனர். ஏனையோரும் விரைவில் குடியமர்த்தப்படுவரென எதிர்பார்க்கபடுகிறது.

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அலுவலகம் திறப்பு

இது வரை காலமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அலுவலகம் கடந்த முதலாம் திகதி முதல் மீண்டும் எம்மிடம் கையளிக்கப்பட்டது. இதன் நிர்வாகச் செயற்பாடுகளும் கடந்த வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனையிலேயே புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான உதவிகள்

இந்த மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்குத் தேவையான உலருணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 4000 ஏக்கர் நெற் காணியில் விதைப்பு வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மானிய அடிப்படையில் வழங்கப்படுகின்றன. உழவு வேலைகள் இலவச மாகச் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நீர்ப் பாசன வசதிக ளும் செய்து கொடுத்துள் ளோம்.

புதிய வீடுகள், மற்றும் திருத்தியமைத்தல்கள்

துணுக்காய், மாந்தை கிழக்குப் பகுதிகளில் மீளக் குடியேற்ற நடவடிக்கைகள் 90சத வீதமளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த இரு பிரதேசங்களிலும் நிரந்தரமாக 2700 புதிய வீடுகளைக் நிர்மாணிப்பதற்கான பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம். ஒரு வீட்டினைப் புதிதாக அமைப்பதற்கு மூன்றரை இலட்சம் ருபா வரையில் நிதி வழங்கி வருகிறோம். அரசின் வடக்கு, கிழக்கு வீடமைப்புத் திட்டத்தின் கீழும் உலக வங்கியின் உதவியுடனுமே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேதமடைந்த வீடுகளைத் திருத்திக் கொள்வதற்காக சேதமதிப்பீட்டுக்கு அமைய நிதி உதவி வழங்கப்படுகிறது. சேதமடைந்த வீடுகளின் திருத்தப் பணிகளுக்காக ஓர் இலட்சம் ரூபா முதல் ஒன்றரை இலட்சம் ரூபா வரை உதவிகளை வழங்கி வருகிறோம். துணுக்காய் பிரதேச செயலகம் விரைவில் எம்மிடம் கையளிக்கப்படவுள்ளது. நாம் அதனைப் பொறுப்பேற்றுக் கொண்டதும் விரைவில் அங்கு நிர்வாகப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த வேலைகள் முடிவடைந்ததும் அங்கும் நிர்வாகப் பணிகள் இடம்பெறும்.

பாடசாலைகள் இயங்குகின்றன

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் குடியேற்றப்பட்ட இடங்களிலுள்ள பாடசாலைகள் வழமைபோல் இயங்கி வருகின்றன. துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 17 பாடசாலைகளும் மாந்தை கிழக்குப் பகுதியில் 13 பாடசாலைகளும் ஒட்டிசுட்டானில் 03 பாடசாலைகளுமாக 33 பாடசாலைகள் இயங்குகின்றன. இந்த 33 பாடசாலைகளிலும் சுமார் நான்காயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 418 ஆசிரியர்கள் கல்வி போதிக்கிறார்கள். இவர்களுக்கும் மேலாக 25 தொண்டர் ஆசிரியர்களை நியமித்துள்ளோம். பல பாலர் பாடசாøலகளும் இங்கு இயங்குகின்றன.

வடக்கின் வசந்தம்

இது தவிர அரசாங்கத்தின் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழும் இந்த மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனது வீட்டில் ஐந்து பிரதேச செயலகங்கள் கடந்த ஆறுமாத காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களும் எனது வீட்டிலேயே இயங்கி வந்தன. இந்த ஐந்து செயலகங்களின் பணிகளையும் வவுனியா செயலகத்தில் மேற்கொள்ள நான் முயற்சி எடுத்தேன். ஆனால், அங்கு இடமில்øல öயனக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே எனது வீட்டில் இந்த ஐந்து செயலகங்களையும் இயக்க வேண்டியிருந்தது. தற்போது மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு வருவதால் அனைத்து செயலகங்களும் அந்தந்தப் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டு விட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக