14 மார்ச், 2010

இரா. சம்பந்தன் ஐயாவுக்கு




பொதுத் தேர்தலில் தெரிவாகும் தமிழ்த் தலைவர்களுடன் இனப் பிச்சினையின் தீர்வு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருப்பதால் உங்களுடைய கட்சிக்காரரையே தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்ற பாணியில் பேசியிருக்கின்றீர்கள் . பத்திரிகையில் படித்தேன்.

அப்படியானால் தேர்தலுக்குப் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசுவதற்கு உங்கள் கட்சி தயார். ஏற்கனவே அவருடன் பேசியிருக்கலாமே. பேச்சுக்கு அழைத்த போதும் நீங்கள் போகவில்லை. பத்திரிகையாளர் மகாநாடு கூட்டிப் போக முடியாது என்று கூறினீர்கள். இந்த ஜனாதிபதியுடன் பேசிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என்று சொன்னீர்கள். இப்போது அதே ஜனாதிபதியுடன் பேசுவதற்காக உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களைக் கேட்கின்றீர்கள் . முரண்பாடாக இருக்குதே.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே மக்கள் விரும்புகிறார்கள். இது உங்களுக்கும் தெரியும். எப்படியாவது எம்.பி ஆகவேண்டும் என்று விரும்புவதால், பேச்சுவார்த்தைக்குத் தயார் என்ற பாணியில் பேசுகின்றீர்கள் என்று சிலர் சொல்கின்றார்கள். ஒரு தேர்தலில் திருமலை மாவட்டத்தில் உங்களிலும் பார்க்கக் கூடுதலான வாக்குகள் பெற்றுத் தங்கத்துரை தெரிவாகினார். அவர் இராஜினாமா செய்து உங்களுக்கு இடம்விட வேண்டும் என்று உங்கள் ஆதரவாளர்கள் மூலம் அழுத்தம் பிரயோகித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. அது உண்மையா பொய்யா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இப்போதும் இடைக்கிடை அது பற்றிய பேச்சு எழுகின்றது. எம். பி பதவியில் உங்களுக்கு அவ்வளவு ஆர்வம் என்கிறார்கள்.

சர்வதேச சமூகம் பிரச்சினையின் தீர்வுக்கு உதவக் காத்திருக்கின்றது என்று அடிக்கடி கூறுகின்றீர்கள் . இது உங்களுடைய கட்சி இன்று நேற்றுக் கூறும் கதையல்ல. பல வருடங்களாகச் சொல்லி வருகின்றீர்கள் . சந்திரிகாவின் காலத்திலிருந்து நேற்றுவரை எத்தனையோ வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்று கோரிக்கை விடுத்தீர்கள். பல நாடுகளுக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்தீர்கள். ஒன்றும் நடக்கவில்லையே. யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையாவது சர்வதேச சமூகத்தினால் தடுக்க முடிந்ததா?

இந்தியா உதவிக்கு வந்து பதின்மூன்றாவது திருத்தத்துக்கு வழிவகுத்தது. அதை நீங்கள் நிராகரிக்கின்றார்கள் . அத்திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான தீர்வைப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கத்துடனேயே பேச வேண்டும். இந்தியாவின் உதவி அந்தப் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமேயொழிய அதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. இந்த நிலையில், உங்கள் கட்சியின் கையாலாகாத் தனத்தை மறைப்பதற்காகவே பிரச்சினையின் தீர்வுக்கு எதையுமே செய்ய முடியாத சர்வதேச சமூகம் பற்றிப் பேசி மக்களை எமார்ருகிண்றீர்கள் என்று நினைக்க வேண்டியுள்ளது.

பட்டு வேட்டி கட்டினால் நன்றாகத்தான் இருக்கும். அதற்காகக் கட்டியிருக்கும் கோவணத்தைக் கழற்றி எறிவதா?

நீங்கள் நடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்ப்பீர்களேயானால் இந்தக் கேள்வியின் அர்த்தம் புரியும்.

வடக்கு, கிழக்கு மாகாண சபையை நிராகரித்தீர்கள். அதனிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுக்காக நிராகரிக்கின்றீர்கள் என்று நான் நினைத்தேன். சந்திரிகாவின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் வந்தது. அதில் சிறுபான்மையினருக்குப் பல பாதுகாப்புகள் இருந்ததாகப் பத்திரிகையில் படித்தேன். மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்கள் என்றும் படித்தேன். இந்திய வம்சாவளியினர் அனைவரினதும் பிரசாவுரிமைக்கு அரசியலமைப்பில் உத்தரவாதம் இருந்தது என்றும் சொன்னார்கள். அந்தத் தீர்வுத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த உங்கள் கட்சி திடீரென பல்டி அடித்து எதிர்த்தது. அதனால் தீர்வைக் கைவிட நேர்ந்தது.

அந்தத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழ் மக்கள் இன்று முகங்கொடுக்கும் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது என்று சொல்கின்றார்கள். அது சரி என்றே நினைக்கிறேன்.

கடைசியில் புலிகளுடன் சேர்ந்து உலக சாதனையொன்றைப் படைத்துவிட்டீர்கள். உண்மைதான். உலகில் எந்தவொரு அரசியல் கட்சியும் உங்கள் கட்சியைப் போலத் தனது சொந்த இனத்தின் பேரழிவுக்கு வழிவகுக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக