24 மார்ச், 2010

24.03.2010 தாயகக்குரல்.


உலக மனச்சட்சியை தட்டியெழுப்பி எமது தேசியம் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றுக்காக குரல் கொடுக்க, சர்வதேச அரங்கில் எமது விடையங்களை எடுத்துக் கூறத்தக்க தெளிந்த அரசியல் புலமையாளர்கள், கல்வியாளர்கள் தேவையென யாழ்மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.


இவருடைய கருத்தை நோக்கும்போது இனப்பிரச்சினை ஆரம்பித்த காலத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய சேர் பொன்.அருணாசலம், சேர் பொன். இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயம் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயல்பட்ட ஏனைய தலைவர்களும் அரசியல் புலமை இல்லாதவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினை இன்னமும் சர்வதேசத்தின் அங்கீகரத்தை பெறவில்லை. ஆகையால் இனப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணமுடியவில்லை என்று பேராசிரியா சொல்ல வருகிறாரா என்ற கேள்வி எழுகிற இனப்பிரச்சினையும் இந்திய வம்சாவழியினரான மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினையும் சமகாலத்தில் தோன்றியது . இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் மொழிப்பிரச்சினை ஆரம்பித்திருந்த போதிலும் சுதந்திரத்திற்கு பின்னர்தான் அரசியல் அரங்கிற்கு வந்தது. ஆனால் மெத்தப் படிக்காத மலையக மக்களின் தலைவர்கள் தங்கள் மக்களின் குடியுரிமையை பறித்தவர்களிடமே திரும்ப பெற்றுள்ளனர்.


1948ல் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. ஆனால் அதே மக்களின் குடியுரிமையை வழங்கும் சட்டமூலம் 1986ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் 121 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்களைக் கொண்டிருந்த மலையக மக்களின் தலைவர்கள் சிங்கள இனவாத அரசு என வர்ணிக்கப்படும் அரசாங்கத்தில் தங்கள் குடியுரிமையைப் பெறமுடியுமானால் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் ஏகபிரதிநிதிகளாக 60 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தியவர்கள் என்பது மாத்திரமல்ல எதிர்கட்சிக்கு தலைமை தாங்கிய தலைவர்களால் ஏன் தமிழ் மக்களின் உரிமைகளை பெறமுடியாமல் போனது?


1978ல் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் தமிழீழ தனியரசுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதோடு சோமர்வில்லி நகரம் திருகோணமலையை தனது சகோதர நகரமாக பிரகடனம் செய்தது.


இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து அமெரிக்கா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன்வந்துவிட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களிடையே தம்பட்டம் அடித்தது. 1983 இனக்கலவரத்தின் பின்னர் இந்தியாவின் தலையீடு, நோர்வேயின் தலையீடு, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு என்ற பெயரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலையீடு, சர்வதேச நாடுகளில் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் என்று சர்வதேசம் ஏதோ ஒருவகையில் இனப்பிரச்சினையில் தலையிட்டு கொண்டுதான் இருக்கின்றன.


1986ம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இலங்கைக்கு நிதிஉதவி எதுவும் வழங்கப் போவதில்லை என உதவி வழங்கும் நாடுகள் தெரிவித்துவிட்டதாக அப்போது நிதி அமைச்சராக இருந்த ரொனி டி.மெல் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடவேண்டும்


1986ல் இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க ஐ.நா.சபை தனிக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் எனக் கூறியிருந்தது. எனவே புதிதாக இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியதில்லை.


இந்த நிலையில் இனப்பிரச்சினைபற்றி சர்வதேச சமூகத்திற்கு விளங்க வைக்க அரசியல் புலமை பெற்றவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றும் மக்களிடம் வருகிறது.


கடந்த காலங்களில் தமிழ் மக்களின் ஆணைகேட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை பிரதான நிகழ்ச்சி நிரலாக கொள்ளாததே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகும்.


அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பாக அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பிரச்சார மேடைகளில் பிரஸ்தாபித்து வருகின்றன. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுத் திட்டம் முனவைக்கப்படும் எனக் கூறுகிறார். அந்த தீர்வுத்திட்டம் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் சிங்கள மக்கள் அங்கீகரிக்கக் கூடியதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கிறார்.


தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டம் எதுவும் இன்றைய நிலையில் சிங்கள மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. அந்த நிலைக்கு சிங்கள மக்களை கொண்டுவந்ததில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பங்குண்டு.


இனப்பிரச்சினை பூதாகரமாக வளர்ந்துள்ள இன்றைய நாள்வரை இனப்பிரச்சினை தீர்வுக்கு பல ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. பல பிரேரணைகள் முன்மொழியப்பட்டன.


அ) 1957; ல் பண்டா- செல்வா ஒப்பந்தம்.

ஆ.) 1965ல் டட்லி செல்வா ஒப்பந்தம்

இ) 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம்.

ஈ) 1988ல் ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு பிரேரணைகள்.

உ) 1992ல் மங்கள முனசிங்கா பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை.

ஊ) 1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐ.தே.கட்சியின் விஞ்ஞாபனத்தில அடங்கியுள்ள காமினி திசநாயக்காவின் பிரேரணைகள்,

எ) 2000ஆம் ஆண்டு பொதுசன ஐக்கிய முன்னணியின் அரசியல் அதிகாரப் பகிர்வு ஆலோசனை

ஏ) 2003ல் ஒஸ்லோ பிரகடனம்.

ஒ) 2006-2009 சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை.


இப்படி பல முயற்சிகள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. இந்த முயற்சிகளின் தோல்விகளுக்கு சிங்கள தலைவர்களின் தீவிரவாதப் போக்குமட்டும் காரணமல்ல. தமிழ் தலைவர்களின் தீவிரவாதப் போக்கும் ஒரு காரணமாகும். எப்படி இருந்த போதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசாங்கத்துடன் பேசியே தீர்வு காணவேண்டும். அதை விடுத்து இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் பக்கம் கையைக் காண்பிப்பது மக்களை தவறாக வழிநடத்துவதாகும். சர்வதேச சமூகம் கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட வரம்புக்;குள்ளேயே இனப்பிரச்சினையை அணுகிவந்தன.


ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசு அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவே இருந்துள்ளது. 1986ம் ஆண்டு இலங்கைத்தமிழர் பிரச்சினையை இந்தியாவுக்கு எதிராக திருப்பிவிடும் முயற்சியில் ஏகாதிபத்திய சக்திகள் ஈடுபட்டுள்ளதாக ரஷ்சிய தலைவர் மிக்கெய்ல் கோர்ப்பச் சேவ் குற்றம் சாடியிருந்தார். அப்போது, இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து ரஷ்சிய தலைவர் மிக்கெய்ல் கோர்ப்பச் சேவ் தெரிவித்த கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இலங்கை அரசு கோரியிருந்தது.


இன்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளின் எதிர் முகாம்களுடன்; குறிப்பாக ரஷ்சியா, சீனா,ஈராக்,லிபியா போன்ற நாடுகளுடன் நட்பை பேணுவதால் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு சில நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. ஆனாலும் இந்நாடுகள் இந்தியாவை மீறி இலங்கைப் பிரச்சினையில் தலையிடமாட்டாது என்பதை கடந்த கால அனுபவங்களில் இருந்து மக்கள் படித்து விட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் இனி பாடம் படிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக