சரத் பொன்சேகா மீது இலங்கை அரசு மேலும் நடவடிக்கை
சரத் பொன்சேகாவை கைது செய்து அவரை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான இலங்கையின் நடவடிக்கைகள் ஏற்கனவே சர்வதேச கண்டனத்தை ஈர்த்துள்ளன.
இந்த நடவடிக்கைகள் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலகுபடுத்துவதற்கு எந்த வகையிலும் உதவாது என்று பிரிட்டன் கூட விமர்சித்துள்ளது.
ஆனால், இலங்கை அரசாங்கமோ இப்போது இந்த நடவடிக்கைகளை மேலும் முன்னெடுக்க தயாராகி வருகிறது.
சரத் பொன்சேகா அவர்கள் தனது சொந்தக்காரர்கள், சட்டவிரோத இலாபங்களைப் பெறவும், இராணுவத்தில் அதிருப்தியை ஏற்படுத்தவும், இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு தஞ்சமளித்தும் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று விதிகளை தகர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றும் அதற்காக அவருக்கு சிவில் சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட விருப்பதாகவும், இலங்கை அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை என்று சரத் பொன்சேகாவின் நெருங்கிய சகாவான டிரான் அலஸ் கூறுகிறார். ஒட்டுமமொத்தமாக தாம் இவை அனைத்தையும் மறுப்பதாகவும் அவர் கூறுகிறார்.
முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகா அவர்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டே உள்ளார், ஆனால், அவர் நடக்கவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஜனநாயக தேசியக் கூட்டணி என்னும் பெயரில் அவர் தற்போது கட்சிகள் மற்றும் குழுக்கள் அடங்கிய ஒரு கூட்டணிக்கு தற்போது தலைமை தாங்குகிறார். அந்த கூட்டணியின் சார்பில் அவர் போட்டிடுவதற்காக கொழும்பு மாவட்டத்தில் அவர் சார்பில் அவரது மனைவி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கிய முக்கிய எதிர்க்கட்சி வேறு ஒரு கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அலஸ் ஒப்புக்கொண்டார்.
இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு அவற்றின் சின்னம் மிகவும் முக்கியமான விடயமாகும். அதனடிப்படையில் வேறு அனைத்தையும் விட ஐக்கிய தேசிய கட்சி தனது பாரம்பரிய யானைச் சின்னத்தில் போட்டியிடுவதிலேயே ஆர்வம் காட்டுகிறது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்து பலர் விலகி அரசாங்க தரப்பில் இணைவது பல தடவைகள் நடந்துள்ளது. ஆகவே இந்த தேர்தலிலும் ஆளும் கட்சி மீண்டும் வெற்றிபெற்றால் அத்தகைய கட்சி மாற்றங்கள் தொடரக் கூடும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக