25 பிப்ரவரி, 2010


ரணில் கோரிக்கை, பொன்சேகா ஏற்க மறுப்பு: இலங்கை தேர்தலில் மும்முனை போட்டி



கொழும்பு: இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட சரத் பொன்சேகா மறுத்து விட்டார். இதையடுத்து, தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி., இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை ஒரே கூட்டணியில் போட்டியிட்டன. இருந்தாலும், இந்த கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தோல்வி அடைந்தார். வரும் ஏப்ரலில் பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த முயற்சி பயன் அளிக்கவில்லை.


ஜே.வி.பி., தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணி அமைந்துள்ளது. இவை தனித் தனியாக பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, கொழும்பு தொகுதியில் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐக்கிய தேசிய கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே, பொன்சேகாவின் மனைவி அனோமாவை சந்தித்து பேசினார். அப்போது, சரத் பொன்சேகாவை, தங்கள் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட வைக்க அவர் விருப்பம் தெரிவித்தார். இதுகுறித்து பொன்சேகாவிடம், அனோமா பேசியதாகவும், ரணிலின் கோரிக்கையை பொன்சேகா ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து, ஜே.வி.பி., கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஜனநாயக மக்கள் கூட்டணி கட்சித் தலைவர் மனோ கணேசன் கூறியதாவது: ஐக்கிய தேசிய கட்சித் தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடுமாறு, ரணில் விக்கிரமசிங்கே, பொன்சேகாவை வலியுறுத்தினார். ஆனால், இதை பொன்சேகா நிராகரித்து விட்டார். ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் அவர் கொழும்பில் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. இந்த தகவலை பொன்சேகாவின் மனைவி அனோமா தெரிவித்தார். இவ்வாறு மனோ கணேசன் கூறினார். இதையடுத்து, பார்லிமென்ட் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் பொன்சேகா, தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக